Monday, 21 November 2016

1 இனிதான் வாழ்க்கை

அறுபதற்கு மேலினிமேல் என்ன வாழ்க்கை?
அயர்ந்துவிட்டால் நமக்குத்தான் போச்சு யாக்கை!
அறிவதற்கும் அடைவதற்கும் இன்னும் வேட்கை
அடியேனைத் துரத்துதடா அடைவேன் நோக்கை!

இனிமேல்தான் என்வாழ்க்கை சிறக்க வேண்டும்;
இனிமேல்தான் என்னருமை புரிய வேண்டும்;
இனிமேல்தான் என்திறமை வெளியே வந்து,
'எங்கிருந்தான் இக்கவிஞன் இதுவ ரைக்கும்?'
எனவூரார் வியப்பெய்த உயர வேண்டும்;
இனிமேல்தான் எனையரசும் நோக்க வேண்டும்;
இனிமேல்தான் எனையிழிவாய் நினைத்தோ ரெல்லாம்
எனைப்பார்க்கக் கண்கூசிப் பதுங்க வேண்டும்!

நேற்றுவரை ஒருவிதமாய் இருந்தோ ரெல்லாம்
நித்தமும் அப்படியே இருப்பா ரென்ற
கூற்றினிலே உண்மையில்லை! உறுதி யில்லை!
கூடைகூடை யாய்ச்சரிதம் சான்று கூறும்:

நேற்றுவரை அருணகிரி கெட்ட ழிந்தான்;
நிமிடத்தில் தமக்கையால் மாறிப் போனான்!
நேற்றுவரை காளிதாசன் ஆடு மேய்த்தான்;
நிமிடத்தில் காளியால் கவிஞ னானான்!
நேற்றுவரை போர்வெறியன் அசோகன்; ஆனால்
நிமிடத்தில் கலிங்கத்தில் சரணம் என்றான்!
நேற்றுவரை இராஜபோக சித்தார்த் தன்தான்
நிமிடத்தில் துறவெய்திப் புத்தம் கண்டான்!

யாருக்கு எப்போது மனது மாறும்?
யாராலே எதனாலே வாழ்க்கை மாறும்?
யாருக்கு என்னென்ன நடக்கும் என்று
யார்கண்டார்? உனக்கொன்று சொல்லு கின்றேன்:
பேருக்கு வாழாதே! பேரா சைத்தீப்
பிழம்பாக உனக்குள்ளே எரியும் என்றால்
யாருக்கும் அஞ்சாதே! உன்னைப் பற்றி
யாரென்ன சொன்னாலும் அதைஏற் காதே!

மடையனெனச் சொல்லட்டும்; நகைத்துக் கொள்வாய்!
கடையனெனச் சொல்லட்டும்; நகைத்துக் கொள்வாய்!
விடைதெரியும் சிலநாளில்! வீணர் கூட்டம்
வெட்கத்தில் தலைகுனிய அடித்துச் சொல்வேன்:
உடையவனாய் நீயிருப்பாய்! என்றும் மக்கள்
உள்ளத்தில் நீயிருப்பாய்! உண்மை! உண்மை!
படைநிகர்த்த தமிழ்கையில் இருக்கும் போது
பலர்பேசும் பேச்சுக்கா அச்சம்? வெட்கம்!

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே யுள்ள
மெல்லியநற் கோட்டருகே வந்து விட்டாய்;
சற்றேனும் யாருமெதிர் பாரா நேரம்
சடக்கெனவே தாண்டிடுவாய்! வெற்றி! வெற்றி!

மாற்றங்கள் உனக்குள்ளே நுழையும் நேரம்;
மனக்கதவைப் பெரிதாகத் திறந்து வைப்பாய்!
ஏற்றங்கள் உனைத்தேடி நெருங்கும் நேரம்;
இதயத்தைக் குளிப்பாட்டி அழகாய் வைப்பாய்!
ஊற்றுக்கண் ஒவ்வொன்றாய்த் திறக்கும் நேரம்;
உற்சாகம் பொங்கிவர எழுந்து நிற்பாய்!
ஆற்றல்கள் ஒருசேரக் குவியும் நேரம்;
அற்புதமாய்க் காவியங்கள் படைத்து நிற்பாய்!

போனதொரு கொடுங்காலம்; வழியில் லாமல்
புல்லர்க்குப் பணிசெய்தே ஓய்ந்த காலம்!
ஆனதின்று பொற்காலம்! உன்னை இங்கே
அடையாளம் கண்டுணர்ந்து மேலே தூக்கத்
தேனமுதத் தமிழ்ச்சுவைஞர் பலபேர் உள்ளார்;
திடமாகக் கால்பதித்துத் திரைத்து றையில்
வானமுத மழைபோல வருத்த மின்றி
வரம்பெற்ற கவிபாடி வாழி நெஞ்சே! 9840382003