Monday, 21 November 2016

1 இனிதான் வாழ்க்கை

அறுபதற்கு மேலினிமேல் என்ன வாழ்க்கை?
அயர்ந்துவிட்டால் நமக்குத்தான் போச்சு யாக்கை!
அறிவதற்கும் அடைவதற்கும் இன்னும் வேட்கை
அடியேனைத் துரத்துதடா அடைவேன் நோக்கை!

இனிமேல்தான் என்வாழ்க்கை சிறக்க வேண்டும்;
இனிமேல்தான் என்னருமை புரிய வேண்டும்;
இனிமேல்தான் என்திறமை வெளியே வந்து,
'எங்கிருந்தான் இக்கவிஞன் இதுவ ரைக்கும்?'
எனவூரார் வியப்பெய்த உயர வேண்டும்;
இனிமேல்தான் எனையரசும் நோக்க வேண்டும்;
இனிமேல்தான் எனையிழிவாய் நினைத்தோ ரெல்லாம்
எனைப்பார்க்கக் கண்கூசிப் பதுங்க வேண்டும்!

நேற்றுவரை ஒருவிதமாய் இருந்தோ ரெல்லாம்
நித்தமும் அப்படியே இருப்பா ரென்ற
கூற்றினிலே உண்மையில்லை! உறுதி யில்லை!
கூடைகூடை யாய்ச்சரிதம் சான்று கூறும்:

நேற்றுவரை அருணகிரி கெட்ட ழிந்தான்;
நிமிடத்தில் தமக்கையால் மாறிப் போனான்!
நேற்றுவரை காளிதாசன் ஆடு மேய்த்தான்;
நிமிடத்தில் காளியால் கவிஞ னானான்!
நேற்றுவரை போர்வெறியன் அசோகன்; ஆனால்
நிமிடத்தில் கலிங்கத்தில் சரணம் என்றான்!
நேற்றுவரை இராஜபோக சித்தார்த் தன்தான்
நிமிடத்தில் துறவெய்திப் புத்தம் கண்டான்!

யாருக்கு எப்போது மனது மாறும்?
யாராலே எதனாலே வாழ்க்கை மாறும்?
யாருக்கு என்னென்ன நடக்கும் என்று
யார்கண்டார்? உனக்கொன்று சொல்லு கின்றேன்:
பேருக்கு வாழாதே! பேரா சைத்தீப்
பிழம்பாக உனக்குள்ளே எரியும் என்றால்
யாருக்கும் அஞ்சாதே! உன்னைப் பற்றி
யாரென்ன சொன்னாலும் அதைஏற் காதே!

மடையனெனச் சொல்லட்டும்; நகைத்துக் கொள்வாய்!
கடையனெனச் சொல்லட்டும்; நகைத்துக் கொள்வாய்!
விடைதெரியும் சிலநாளில்! வீணர் கூட்டம்
வெட்கத்தில் தலைகுனிய அடித்துச் சொல்வேன்:
உடையவனாய் நீயிருப்பாய்! என்றும் மக்கள்
உள்ளத்தில் நீயிருப்பாய்! உண்மை! உண்மை!
படைநிகர்த்த தமிழ்கையில் இருக்கும் போது
பலர்பேசும் பேச்சுக்கா அச்சம்? வெட்கம்!

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே யுள்ள
மெல்லியநற் கோட்டருகே வந்து விட்டாய்;
சற்றேனும் யாருமெதிர் பாரா நேரம்
சடக்கெனவே தாண்டிடுவாய்! வெற்றி! வெற்றி!

மாற்றங்கள் உனக்குள்ளே நுழையும் நேரம்;
மனக்கதவைப் பெரிதாகத் திறந்து வைப்பாய்!
ஏற்றங்கள் உனைத்தேடி நெருங்கும் நேரம்;
இதயத்தைக் குளிப்பாட்டி அழகாய் வைப்பாய்!
ஊற்றுக்கண் ஒவ்வொன்றாய்த் திறக்கும் நேரம்;
உற்சாகம் பொங்கிவர எழுந்து நிற்பாய்!
ஆற்றல்கள் ஒருசேரக் குவியும் நேரம்;
அற்புதமாய்க் காவியங்கள் படைத்து நிற்பாய்!

போனதொரு கொடுங்காலம்; வழியில் லாமல்
புல்லர்க்குப் பணிசெய்தே ஓய்ந்த காலம்!
ஆனதின்று பொற்காலம்! உன்னை இங்கே
அடையாளம் கண்டுணர்ந்து மேலே தூக்கத்
தேனமுதத் தமிழ்ச்சுவைஞர் பலபேர் உள்ளார்;
திடமாகக் கால்பதித்துத் திரைத்து றையில்
வானமுத மழைபோல வருத்த மின்றி
வரம்பெற்ற கவிபாடி வாழி நெஞ்சே! 9840382003

Tuesday, 14 April 2015

2 பணி நிறைவு பெற்றேன்


ஊரில் எனக்கொரு மதிப்பைத் தந்ததும்,
உற்றார் உறவினர் மத்தியில்
பேரைத் தந்ததும், பிழைப்பைத் தந்ததும்,
பெரிய மனிதரும் வணங்கிடும்
சீரைத் தந்ததும், சிறப்பைத் தந்ததும்,
செல்வ வளர்ச்சியைத் தந்ததும்,
பாரில் நல்லதோர் மனைவி தந்ததும்,
பழக்க வட்டங்கள் தந்ததும்,

உடன்பி றந்தவர் படிக்க வைத்ததும்,
உற்ற தந்தைநோய் தீர்த்ததும்,
கடனும் உடனுமாய்த் தங்கை மார்களைக்
கட்டிக் கொடுத்ததும் காத்ததும்,
உடைமை யாகவே வீடு, வாகனம்,
உரொக்கம், நகையெனச் சேர்த்ததும்,
பிடியில் சேர்மரு மகன்கள் வந்ததும்,
பேரன் பேத்திகள் எடுத்ததும்,

இந்த வேலையால் தானே? இறைவனே,
இன்று இதனைநான் முடிக்கிறேன்!
முந்தும் உணர்ச்சிகள் முட்டிச் சூழ்ந்தெனை
மூழ்க டிக்குதே வெள்ளமாய்!
இன்ப உணர்ச்சியும் துன்ப உணர்ச்சியும்
என்னைக் கௌவுதே மௌனமாய்!
என்ன சொல்லுவேன்? என்ன செய்குவேன்?
இதயம் கொல்லுதே சன்னமாய்!

அரசுத் துறையினில் அறிவு, செயல்திறன்,
அகவை, அனுபவம் எதற்குமே
உரிய மதிப்பிலை; உழைப்பிற் குயர்விலை;
உளைந்து சாவதில் பயனிலை!
பெரிய துரையையும் சிறிய வேலையாள்
பேரைச் சொல்லியே மிரட்டுவான்!
நரிகள் போன்றவர் நயக்கும் துறையது;
நமக்குச் சரிப்பட வில்லையே!

எனக்கொர் திறமையை இறைவன் நல்கினான்
இனிய கவிதைகள் புனைவது;
மனத்தில் இதனைநான் வைத்து மறுகியே
வாழ்க்கை இதுவரை கழிந்தது!
அனைத்தும் அறிந்தவா! குடத்து விளக்கினை
அகிலம் அறியவே ஏற்றுவாய்!
இனிக்கும் தீந்தமிழ் மணக்கும் பூந்தமிழ்
என்னை யாளவே மாற்றுவாய்! 9840382003

3 தாத்தா ஆகிவிட்டேன்

பேத்தி பிறந்துவிட்டாள்! - எனக்குப்
பெருமை தாங்கவில்லை!
தாத்தனாய் ஆகிவிட்டேன்! - தனனா
தந்தன தந்தனனா !

மகளைப் பெற்றதினும் - மகிழ்ச்சி
மனதில் மூண்டதடா!
தகவல் வந்ததுமே - எனக்குத்
தலைகால் புரியவில்லை!

ஓடி அருகடைந்தேன்! - பேத்தி
ஒருமுழம் குறைவே!
மூடி இமைவழியே - என்
முகத்தைப் பார்த்துவிட்டாள்!

ஆழ்ந்த உறக்கத்திலே - அவளின்
அமைதித் தோற்றத்திலே
வீழ்ந்துவிட் டேன்நானே! - இன்னும்
வியப்பு மாறவில்லை!

குட்டிக்குட்டிக் கால்கள்! - அழகுக்
குட்டிக்குட்டிக் கைகள்!
குட்டிச் சிறுவயிறு! - பூப்போல்
குட்டியாய் வட்டமுகம்!

கையும்காலும் மடித்து - இன்னும்
கருவில் உள்ளதுபோல்
வாயுமகண்ணும் மூடி - இருக்கும்
வடிவை என்னசொல்வேன்!

அற்புதம் என்னவென்பேன்! - ஆண்டவன்
அறிவை என்னவென்பேன்!
முற்றிலும் பிஞ்சுவண்ணம்! - தெய்வீகம்
முகத்தில் கொஞ்சிமின்னும்!

தொட்டால் திடுக்கிடுவாள்! - தோலில்
தொட்ட விரல்அமுங்கும் !
விட்டால் குருதிவெள்ளம் - பாய்ந்து
மேலும் சிவந்துவிடும்!

தூக்கப் பயம்எனக்கு! - சிசுஉடல்
துவளும் கீரையன்றோ!
பார்க்க வியப்பெனக்கு! - சிசுவே
படைப்பின் விந்தையன்றோ!

அழுதல் சப்பிடுதல் - இவையே
அவள் அறிந்தவையாம்!
பழகிப் பின்அறிவாள் - நம்மைப்
பார்த்துத்தான் மற்றதெல்லாம்!

நல்லவர் மட்டிலுமே - அதனால்
நன்றவள் முன்வருக!
அல்லவர் போய்விடுக! - நுங்கள்
அலுவல் பார்த்திடுக!

தந்தையின் சாயலென்பார்! - சிலர்
தாயினைப் போலவென்பார்!
வந்தது தெய்வமென்றேன்! - நம்
வாழக்கையைக் காக்குமென்றேன்!

பூமியாம் தாய்மடியில் - இவள்
புதிய நல்வரவு!
சாமித் தயவினிலே - என்
சந்ததி வாழ்கநன்றே! 9840382003

4 ஒரு திரை இசைப் பாடல்

பல ஆண்டுகளுக்கு முன்னர், இசைஞானி இளையராஜா, குமுதம் வாசகர்களுடமிருந்து
ஒரு பாடலாசிரியரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று, ஒரு தத்த காரத்தையும்,
பாடலுக்கான ஒரு சூழ்நிலையையும் கொடுத்திருந்தார்.
அதற்கேற்ப எழுதிப் பார்த்த பாடல்:

பல்லவி
************
( காதலின் ஆரம்ப அடையாளங்களை உணர்தல்)

தனனனனா னன னானானனா
தனனனனா னன னானானனா

தன்னன்னன னானா
தன்னன்னன னானா
தன்னன்னன னானா
தன்னன்னன னானா

தானா னான னானா னான னானா!

அடிக்கடிஏன் உனை நான்பார்க்கிறேன்?
அதுபுரிந்தால் சிரி, நாள்பார்க்கிறேன்!

கண்ணில்பரி பாஷை!
நெஞ்சில்புது வேட்கை!
பெண்ணுள்எழும் ஆசை!
வெட்கச்சிரிப் போசை

கேட்டேன்! வாழ்வில் நீதான் வேண்டும், வா!வா!

சரணம் 1
**************
( இப்படி ஒரு பெண்ணா என வியத்தல் )

தன
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா

தன்னன னன னானானா
தன்னன னன னானானனா
த்ன்னன னன னானானா
தன்னன னன னானானனா

தனனன னனனா னனனனனா
தனனன னனனா னனனனனா

உனைப்
பகலும்இரவும் நான் நினைக்கவைத்தாய்!
பணியும்உணவும் நான் மறக்கவைத்தாய்!
கண்ணில்படும் அழகே இந்தவிதமோ!
இன்னும்உள்ள அழகே எந்தவிதமோ!

இப்படி ஒரு பாவையை
இத்தனை தினம் காணாமலே
எப்படிப் புவி வாழ்ந்தேனோ,
எவ்விதச் சுகம் காணாமலே?

பருவத்தின் அழகால் கவர்ந்துவிட்டாய்!
பழகிடும் அழகால் உயர்ந்துவிட்டாய்!

மாலை நாளை தோளில் வீழாதோ? ....

சரணம் 2
**************

எனைத்
தொடுதொடுஎனப் பூ முகம்சொல்லுதே!
பிடிபிடிஎன நூல் இடைகெஞ்சுதே!
ஒருமுறை கலந்தால் துயர்விடுமோ!
உள்ளம்பொங்க அணைத்தால் சொர்க்கம்வருமோ!

கண்ணுறக் கமும் காணாதோ,
கன்னியின் மடி சாயாமலே?
பெண்மயக் கமும் தீராதோ,
பிஞ்சுமுத் தங்கள் தாராமலே?

எனக்கெனப் பிறந்தே வளர்ந்தவள்நீ!
உனக்கெனச் சிறந்தே உயர்ந்தவன்நான்!

பாலும் தேனும் ஆறாய் ஓடாதோ? .... 9840382003

5 ஏழையாய்ப் பிறந்ததற்கு வருத்தப் படாதே


தம்பி,
ஏழையாய்ப் பிறந்ததற்கு வருத்தப் படாதே! - உனக்கு
எதிர்காலம் நிறையவுண்டு முயற்சி விடாதே!
தெருவிளக்கில் படித்தவரும் மேதை யாகலாம்! - ஒரு
தினக்கூலி மகன்கூட நாட்டை யாளலாம்!

சின்னச்சின்ன மனங்களிலே தோன்றும் லட்சியம்,
சிறுகனலாய்ப் பெருநெருப்பாய் மாறும் நிச்சயம்!
முன்னேறு படிப்படியாய் ஊக்கம் முக்கியம்! - எதையும்
முயற்சியினால் அடைவதுவே வாழ்க்கைத் தத்துவம்!

குறிக்கோளைத் தெளிவாக வகுத்துக் கொள்ளடா! - தினம்
கொஞ்சங்கொஞ்ச மாய்அதனை நெருங்கிச் செல்லடா!
நெருப்பாறு மறித்தாலும் தாண்டிச் செல்லடா! - உன்
நேர்மைக்கும் உழைப்பிற்கும் காலம் உண்டடா!

பணத்திற்காக வெளிநாடு சென்று விடாதே! - உன்
பாரதத்தாய் மனம்நோகச் செய்து விடாதே!
ஜனத்திற்காகப் போராட மறந்து விடாதே! - உன்
தாய்நாட்டை முன்னேற்றத் தவறி விடாதே!

மக்களோடு மக்களாகக் கலந்து நில்லடா! - நல்ல
மாற்றங்கள் வருவதற்குத் தலைமை தாங்கடா!
சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தெய்வம் உண்டடா! - உன்
தியாகங்கள் வரலாற்றில் நிற்கும் மெய்யடா! 9840382003

6 அந்தத் துடிப்பு உனக்கும் இருந்தால்


வேலை தேடியே - வாடி
மெலியும் தோழனே!

எழுத்து கூட்டிப் படிப்பவன் கூட
எஜமான் ஆகிறான் நாட்டிலே! - நீ
எம்.ஏ. படித்து இன்னும் படித்து
ஏமாந்து நிற்கிறாய் ரோட்டிலே!
வேலை வேலை என்றே இருந்தால்
வீட்டுக்கு வருமா கூப்பிட? - நீ
விவரமாய் இருந்தால் விருந்தே வைக்கலாம்
ஊரெல் லாமும் சாப்பிட!

அப்பன் சொந்தத் தொழிலில் இருந்தால்
அவன்மக னுக்குக் கவலையில்லை!
எம்.பி., எம்.எல்.ஏ பழக்கம் இருந்தால்
எவன்மக னுக்கும் கவலையில்லை!
நோட்டை நீட்ட வசதி இருந்தால்
நூற்றுக்கு நூறு கவலையில்லை! - நீ
ஒன்றுமில் லாமல் படித்தி ருந்தால்
ஒருவ ருக்கும் பயனில்லை!

படித்தால் முதல்பத்துப் பேரில் ஒருவனாய்ப்
பாடத்தை நீயும் படிக்கணும்! - இல்லை,
பைக்கட்டைத் தூக்கித் தலைசுற்றி வீசிப்
பாதையை மாற்றிப் போகணும்!
உனக்கு வேண்டிய அறிவை நீயே
ஓடி ஓடித் தேடணும்!
உழைப்பால் உயர்ந்தவன் என்றபட் டத்தை
உலகம் உனக்குச் சூடணும்!

அரசுப் பணிதான் பாப்பேன் என்றால்
அதற்குள் வயசு போய்விடுமே! - நீ
அழுக்குப் படாமல் இருப்பேன் என்றால்
ஆயுசு முழுதும் தீர்ந்திடுமே!
உழைக்கும் தொழிலில் கௌரவம் பார்த்தால்
உருப்ப டாமல் போய்விடுமே! - நீ
ஒரேஎ மனதாய்த் தொழிலில் இறங்கு
ஊரில் கஷ்டம் நீங்கிடுமே!

பெட்டிக் கடைபோல் வைத்தவர் எல்லாம்
பெருந்தன வந்தர் ஆகலையா? - இங்கே
பிழைப்புத் தேடித் போனவர் எல்லாம்
பேர்புகழ் பெற்று வாழலையா?
சிறிதாய் ஒன்றை முதலில் துவங்கு
தெய்வம் துணையாய் நிற்காதா? - உன்
சிந்தை அதிலே செல்லச் செல்லச்
சிறந்த வழிதான் தோன்றாதா?

சொந்தத் தொழிலின் சுதந்தி ரத்தை
அனுப வித்துப் பார்க்கணும்! - நீ
தூக்க நடுவில் விழித்தால் கூட
தொழில்நி னைப்பு இருக்கணும்!
போட்டி போடும் உலகில் எதையும்
புதுமை யாகச் செய்யணும்! - உன்
புத்தியிலே முன்னேற் றந்தான்
பொழுது போக்காய் அமையணும்!

எந்தத் தொழிலும் இழிவில்லை என்ற
எண்ணத்தை இதயத்தில் ஏற்றுப்பார்! - நீ
இழிவாய் நினைக்கும் தொழிலில் கூட
இலட்சங்கள் புரள்வதை யோசிப்பாய்!
அற்பப் படிப்பு மனிதர்கள் அதிலே
அதிசயம் புரிவதை நேசிப்பாய்!
அந்தத் துடிப்பு உனக்கும் இருந்தால்
அற்புத வாழ்வைச் சந்திப்பாய்! 9840382003

7 நீ பிறந்திருக்கும் நாடு


நீபிறந்தி ருக்கும்நாடு இந்தி யாவடா! - அது
நேற்றிருந்த நிலையைக்கொஞ்சம் எண்ணிப் பாரடா!
வாயிருந்தால் அழுதுவிடும் உண்மை தானடா! - அதன்
மைந்தனாகப் பிறந்தநீயும் செய்வ தென்னடா?

உலகத்திற்கே நாகரீகம் கற்றுத் தந்தது! - இன்று
உழவர்களே தூக்குப்போடும் நிலைக்கு வந்தது!
ஞானிகளும் வீரர்களும் தலைமை பூண்டது! - இன்று
நாசகார சக்திகளின் பிடியில் வீழ்ந்தது!

மனிதனென்று பிறந்துவிட்டால் ஜாதி ஒன்றுதான்!
மனமுருக வேண்டிவிட்டால் தெய்வம் ஒன்றுதான்!
நேர்மையாகப் பாடுபட்டால் தொழிலும் ஒன்றுதான்!
நீபிறந்த நாட்டிலிவை தோன்றும் என்றுதான்?

அடிமையாய் இருந்திருந்து புத்தி மழுங்கிட்டோம்!
அந்நியனைப் பெரியவனாய் நினைத்துப் பழகிட்டோம்!
அதிகாரம் செய்வோர்க்கென்றும் அடங்கிக் கிடந்திட்டோம்! - அவன்
அநியாயம் செய்தபோதும் எதிர்க்கப் பயந்திட்டோம்!

......................................... 9840382003