Tuesday, 14 April 2015

3 தாத்தா ஆகிவிட்டேன்

பேத்தி பிறந்துவிட்டாள்! - எனக்குப்
பெருமை தாங்கவில்லை!
தாத்தனாய் ஆகிவிட்டேன்! - தனனா
தந்தன தந்தனனா !

மகளைப் பெற்றதினும் - மகிழ்ச்சி
மனதில் மூண்டதடா!
தகவல் வந்ததுமே - எனக்குத்
தலைகால் புரியவில்லை!

ஓடி அருகடைந்தேன்! - பேத்தி
ஒருமுழம் குறைவே!
மூடி இமைவழியே - என்
முகத்தைப் பார்த்துவிட்டாள்!

ஆழ்ந்த உறக்கத்திலே - அவளின்
அமைதித் தோற்றத்திலே
வீழ்ந்துவிட் டேன்நானே! - இன்னும்
வியப்பு மாறவில்லை!

குட்டிக்குட்டிக் கால்கள்! - அழகுக்
குட்டிக்குட்டிக் கைகள்!
குட்டிச் சிறுவயிறு! - பூப்போல்
குட்டியாய் வட்டமுகம்!

கையும்காலும் மடித்து - இன்னும்
கருவில் உள்ளதுபோல்
வாயுமகண்ணும் மூடி - இருக்கும்
வடிவை என்னசொல்வேன்!

அற்புதம் என்னவென்பேன்! - ஆண்டவன்
அறிவை என்னவென்பேன்!
முற்றிலும் பிஞ்சுவண்ணம்! - தெய்வீகம்
முகத்தில் கொஞ்சிமின்னும்!

தொட்டால் திடுக்கிடுவாள்! - தோலில்
தொட்ட விரல்அமுங்கும் !
விட்டால் குருதிவெள்ளம் - பாய்ந்து
மேலும் சிவந்துவிடும்!

தூக்கப் பயம்எனக்கு! - சிசுஉடல்
துவளும் கீரையன்றோ!
பார்க்க வியப்பெனக்கு! - சிசுவே
படைப்பின் விந்தையன்றோ!

அழுதல் சப்பிடுதல் - இவையே
அவள் அறிந்தவையாம்!
பழகிப் பின்அறிவாள் - நம்மைப்
பார்த்துத்தான் மற்றதெல்லாம்!

நல்லவர் மட்டிலுமே - அதனால்
நன்றவள் முன்வருக!
அல்லவர் போய்விடுக! - நுங்கள்
அலுவல் பார்த்திடுக!

தந்தையின் சாயலென்பார்! - சிலர்
தாயினைப் போலவென்பார்!
வந்தது தெய்வமென்றேன்! - நம்
வாழக்கையைக் காக்குமென்றேன்!

பூமியாம் தாய்மடியில் - இவள்
புதிய நல்வரவு!
சாமித் தயவினிலே - என்
சந்ததி வாழ்கநன்றே! 9840382003

No comments:

Post a Comment