Tuesday, 14 April 2015

56 சாதி ஒழி மதம் அழி சாதி


(கொடுத்த தலைப்பிற்கேற்ப 24 வரிகளுக்குள்)

ஒற்றுமையை வளர்ப்பதற்கே சாதிகளை வைத்தார்!
ஒழுக்கத்தை வளர்ப்பதற்கே மதங்களையும் வைத்தார்!
கற்றவர்கள் யாருமிதை மறுத்திடவும் மாட்டார்!
கருத்தினிலே மாறுபட்ட தலைப்பெதற்குத் தந்தீர்?

சோற்றினிலே கல்கிடந்தால் கல்லைநீக்கி விட்டுச்
சுவைப்போமா? சோற்றையே தூக்கிஎறி வோமா?
வீட்டினிலோர் எலிபுகுந்தால் எலியையடிப் போமா?
வீட்டையே கொளுத்திவிட்டு வீரம்பேசு வோமா?

சாதிமதம் மனிதருக்குத் தனித்தஅடை யாளம்!
தவிர்த்துவிட்டால் மனிதகுலம் தனிமரமாய்ப் போகும்!
காதலினால் சாதிமதம் தவிடுபொடி யாகும்
காலம்வரும் எனநினைத்தால் அதுமடமை யாகும்!

ஐந்துமுறை தொழுபவர்கள் மதத்தைவிடு வாரோ?
அடியவரும் இராமஜெய ஜெபத்தைவிடு வாரோ?
நொந்துபோன மனங்களுக்கு ஆறுதலாம் மதங்கள்!
நூறுகோடி இருந்தாலும் இணைந்துவிடும் இனங்கள்!

வாழ்கவென்று நீங்கள்சொல்லி வாழ்ந்ததென்ன சொல்வீர்!
வீழ்கவென்று நீங்கள்சொல்லி வீழ்ந்ததென்ன சொல்வீர்?
வாழ்கதமிழ் என்றுரைத்தீர் வந்ததடா பங்கம்!
வீழ்கசாதி என்றுரைத்தீர் பெருகுதடா சங்கம்!

பூமியில்நாம் அனைவருமே ஆண்டவனின் பிள்ளை!
பூசலின்றி வாழ்ந்திடுவோம் புத்தியுமா இல்லை?
சேமமுற சாதிமத பேதங்களைக் கொல்வோம்!
செகத்தினிலே சகிப்புணர்வால் சாதித்து வெல்வோம்! 9840382003

No comments:

Post a Comment