Tuesday, 14 April 2015

33 கண்ணழகைப் பார்க்கப்பார்க்க


கண்ணழகைப் பார்க்கப்பார்க்கக் கவிதை ஊறுதே! - உன்
கனியிதழைப் பார்க்கப்பார்க்க ஆசை மீறுதே!
இடையழகைப் பார்க்கப்பார்க்க ஏக்க மாகுதே! - உன்
எழில்முழுதும் பார்த்துவிட்டால் தூக்கம் போகுதே!

கண்ணொடுகண் பார்த்துவிட்டால் மறக்க முடியலே! - அக்
காட்சிநெஞ்சில் ஓடுவதை நிறுத்த முடியலே!
வார்த்தையொன்று பேசிவிட்டால் மகிழ்ச்சி தாங்கலே! - அதை
வாய்க்குள்ளே சொல்லிப்பார்க்கும் மனசு தூங்கலே!

உனைஎனக்கே சொந்தமாக்க உள்ளந் துடிக்குது! - வேறு
ஒருவருனைப் பார்த்துவிட்டால் கோபம் வெடிக்குது!
மனைவிளக்கே! குலவிளக்கே! மனது வையையடி! - என்
வாழ்க்கைக்கே நீதான் திருப்பு முனையடி!

மாற்றிமாற்றிச் சூடிக்கொள்ள மாலை இல்லையா? - வீட்டில்
மனதார வாழ்த்துகின்ற நெஞ்சம் இல்லையா?
போற்றியுன்னை வைத்துக்காக்க நானும் இல்லையா? - என்
பொற்கொடிஉன் சம்மதந்தான் வேணும் இல்லையா? 9840382003

No comments:

Post a Comment