Tuesday, 14 April 2015

22 கறுப்புப் பெண்ணே


கறுப்புப் பெண்ணே! கறுப்புப் பெண்ணே!
கவலை ஏனம்மா?- உன்
உறுப்பில் ஒன்றும் ஊனம் இல்லை;
உண்டு மகிழம்மா!

பெண்என் றாலே இகழும் நாட்டில்
பிறந்து விட்டாயே! - நீ
கண்ணில் இன்னும் கறுப்பாய்த் தோன்றி
கசந்து விட்டாயே!

கறுப்பென் றதுமே வீட்டில் உன்னைக்
கழற்றி விட்டார்கள்!
பொறுப்பில் லாத பெற்றோர் உன்னைப்
பொசுக்கி விட்டார்கள்!

அன்னை கூட வைதாள் என்றால்
அதுவும் வறுமையால்! - உனக்குப்
பொன்னை அதிகம் போட வேண்டும்
என்ற வழமையால்!

சிறாரும் உன்னைக் கேலி செய்து
சிறகொ டித்தார்கள்!
பொறாமல் நீயும் ஒதுங்கி வாழ்வில்
பொரும விட்டார்கள்!

பெட்குப் பெண்ணே எதிரி என்ற
பேச்சி ருந்தாலும்
வெட்கங் கெட்ட ஆண்கள் தாமும்
வெதும்பச் செய்கின்றார்!

தானே கறுப்பு தங்கை கறுப்பு
தாய்கறுப் பென்றாலும்
தனக்கு வேண்டும் மனைவி மட்டும்
நிறமாய்க் கேட்கின்றார்!

கறுப்புப் பெண்கள் ஆக்கும் சோறு
கசப்பாய் இருக்குமா?
கறுப்புப் பெண்கள் இருக்கும் வீடு
இருட்டாய் இருக்குமா?

கறுப்புப் பெண்கள் சூலா காரா?
பாலசு ரக்காதா?
குறிப்பு ணர்ந்து வரவ றிந்து
குடும்பம் நடத்தாரா?

நிறத்துப் பெண்டிர் கறுப்பாய்ப் பெற்றால்
எங்கே முகம்வைப்பீர்?
நிறத்துப் பெண்டிர் செருக்காய்த் திரிந்தால்
எங்கே கரம்வைப்பீர்?

கறுப்புப் பெண்கள் கவலை ஏக்கம்
கடவுள் அறிவானோ?
கணவன் வரும்வரை கலங்கும் கலக்கம்
கண்டே அதிர்வானோ? 9840382003

No comments:

Post a Comment