Tuesday, 14 April 2015

35 ஓட்டுப் போடாமல் இருக்காதே

ஓட்டுப் போடாமல் இருக்காதே! - நீ
உனது உரிமையை மறுக்காதே!
நாட்டை ஆள்வோரை நியமிக்கும்
நல்ல வாய்ப்பைநீ கெடுக்காதே!

தேர்தல் என்றால் அலட்சியமா? - எனக்குத்
தேவையில் லைஎன்ற தலைக்கனமா? - நீ
வாழ்தல் மட்டும் அவசியமா? - இந்த
வரிசையில் நிற்பது கேவலமா?

நாட்டின் குடிமகன் நீயில்லையா? - இங்கு
நடப்பதில் உனக்குப் பங்கில்லையா?
கேட்டைத் தடுக்க மனமில்லையா? - இங்குக்
கேட்பா ரற்றோர்க்குக் கதியில்லையா?

பாமரர் இங்கே பெரும்பான்மை! - அதைப்
பலிகடா வாக்கும் கொடுங்கோன்மை! - நீ
ஊமையாய் இருந்தால் எதற்காண்மை? - இதை
ஒழிக்க எழுந்தால் வரும்மேன்மை!

தீமையை விரட்டட்டும் உன்ஓட்டு! - புதுத்
திருப்பத்தைக் காட்டட்டும் உன்ஓட்டு!
கூர்மிக்க ஆயுதம் உன்ஓட்டு! - அதைக்
கூர்கெட்ட மனிதர்க்கு நீகாட்டு!

பணத்தால் ஜெயித்திடத் துடிக்கின்றார்! - ஆள்
பலத்தால் ஜெயித்திடத் துடிக்கின்றார்!
உனக்கா முறிக்கத் தெரியாது? - நீ
உடனே புறப்படு முடிவோடு! 9840382003

No comments:

Post a Comment