Tuesday, 14 April 2015

51 இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்

ஏறுபோல் நடையைக் கொண்டாய்!
இளைஞர்கள் மனதை வென்றாய்!
வீறுகொள் எழுச்சி யாலே
வியத்தகு வெற்றி கண்டாய்!
மாறுகொள் சமயத் தாரும்
மகிழ்ந்திட, ராம ராஜ்யப்
பேறுகள் நாடு காணப்
பிரியனே ஆள வா!வா!

நீதியைத் தேடி, எங்கள்
நெஞ்செலாம் வாடி, ஆளும்
பாதகர் கூடி, நாட்டில்
பதுக்கிய கோடி கண்டு
தீதினைச் சாடி, நல்ல
திருப்பத்தை நாடி நின்ற
போதினில் எதிரே வந்தான்
புனிதனாம் மோடி! மோடி!

அமெரிக்கன் அலற, வெள்ளை
ஆங்கிலன் பதற, எங்கும்
திமிரியே திரியும் சீனன்
திகைப்பிலே உறையத், தெற்கே
குமரிக்கீழ் ராஜ பக்சே
குனிந்துமே பணியப், பாக்.கும்
குமுறியுள் தணியப் பூமி
கும்பிட வந்தான் மோடி!

விடையென வந்தான், நாடு
விடியலைக் காண்பதற்கே!
படையென வந்தான்,ஓடிப்
பகைவர்கள் ஒளிவ தற்கே!
தடையென வந்தான், ஊழல்
சக்திகள் பிழைப்ப தற்கே!
உடையென வந்தான், மானம்
உலகின்முன் காப்ப தற்கே!

ஏழ்மையில் பிறந்தாய்! தந்தைக்
கெடுபிடி வேலை செய்தாய்!
தாழ்மையைக் கண்டாய் இல்லை!
தனித்துவம் இழந்தாய் இல்லை!
கூர்மையாம் புத்தி பெற்றாய்!
கொள்கையில் பிடிப்புப் பெற்றாய்!
தீமையை எதிர்ப்பா தற்கே
திடங்கொண்ட நெஞ்சம் பெற்றாய்!

வாய்மையே வாழ்க்கை என்றாய்!
வளர்ச்சியே நோக்கம் என்றாய்!
நேர்மையே வெல்லும் என்றாய்!
நிர்வாகத் திறமை கொண்டாய்!
ஆமைபோல் ஆசா பாசம்
அனைத்தையும் சுருக்கிக் கொண்டாய்!
தூய்மையாம் ஆர்.எஸ். எஸ்.ஸில்
தொண்டொடு தியாகம் கற்றாய்!

வறண்டதாம் குஜராத் மண்ணின்
வடிவினை மாற்றி விட்டாய்!
திரண்டதாம் செல்வம் யாவும்
தெருவினில் காண வைத்தாய்!
அறுபது மாதம் கேட்டாய்;
அணுவணு வாக மாற்றம்
பெறுவது கண்ணில் காண்போம்!
பெருமையை உலகம் பேசும்!

தமிழக முதல்வர் உன்னைத்
தவறாக விமர்சித் தாலும்
உமிழ்ந்திட்ட வார்த்தை எண்ணி
உள்மனம் வைத்துக் கொண்டு
தமிழர்க்குக் கிடைக்கும் நன்மை
தடுக்கவே மாட்டாய் ஐயா!
உமிஎன அவரைக் கொள்வாய்!
உன்மனம் மக்க ளுக்கே!

வங்கத்தின் மம்தா உன்னை
வசைபாடித் தீர்த்திட் டாலும்
சிங்கத்தின் மகனே நீதான்
சீற்றமே கொள்ள மாட்டாய்!
வங்கத்து மக்க ளுக்கு
வகுத்திட்ட நலத்திட் டத்தின்
பங்கைநீ குறைக்க மாட்டாய்!
பாதகம் செய்ய மாட்டாய்!

நதிகளை இணைப்பாய்! மேலை
நாட்டினில் பதுக்கி வைத்த
நிதிகளைக் கொணர்வாய்! நீசர்
வெளியிலும் உள்ளும் செய்யும்
சதிகளை முறிய டித்துச்
சாதனை புரிவாய்! மக்கள்
விதிகளை மதிக்கச் செய்வாய்!
விலைகளைக் குறைப்பாய் ஐயா!

இந்துநீ என்ப தாலே
இருக்கின்ற முஸ்லீம் எல்லாம்
முந்திநீ செய்த தெண்ணி
முகம்சுளிக் கின்றார்! ஆமாம்!
வந்துநீ இதனை மாற்று!
மதமில்லை ஆன்மா விற்கே!
தந்துநீ பாது காத்துச்
சகோதரம் தழைக்கச் செய்வாய்! 9840382003

No comments:

Post a Comment