Tuesday, 14 April 2015

12 பாவ மன்னிப்பு - மனைவியிடம்

பெண்ணே என்னை மணந்திங் கென்ன சுகம்கண்டாய்?
மண்ணே விழுந்த வாழ்வைத் தானே தினம்கண்டாய்!
கண்ணே மணியே என்றா காதல் மொழிகேட்டாய்?
புண்ணே செய்த போதும் மடியில் இடம்கேட்டாய்!

படித்தாய் பட்டம் பெற்றாய் நல்ல பணிபெற்றாய்!
தடித்தாய் என்கைப் பிடித்தாய் அந்தோ மெலிந்தாயே!
நடித்தாய் தாய்முன் நன்றாய் வாழும் மகள்போலே!
பிடித்தாய் கையில் பிள்ளை தொடர்ந்தாய் பின்னாலே!

முரடன் கையில் சிக்கி முகமும் சிதைந்தாயே!
திருடன் கையில் சிக்கிச் செல்வம் இழந்தாயே!
குருடன் என்னால் கோல முற்றும் அழிந்தாயே!
புருடன் இருந்தால் போதும் என்றே புகன்றாயே!

மூஞ்சி யைப்பார் முகரை யைப்பார் என்றேனே!
காஞ்ச மாடு போல இரவில் பாய்ந்தேனே!
மேஞ்ச பிறகு மிதித்துத் தள்ளி விட்டேனே!
தேஞ்ச குரலில் தேம்பக் கண்டும் ஒட்டேனே!

சோறு குழம்பை முகத்தில் வீசி எறிந்தேனே!
தாறு மாறாய்ப் பொருட்கள் கிடந்தால் இரைந்தேனே!
நாறும் வரைக்கும் உன்வீட் டாரைப் பழித்தேனே!
வீறிட் தழுத பிள்ளை களையும் வெளுத்தேனே!

கணக்குப் போட்டுச் சம்ப ளத்தைக் கேட்டேனே!
மனைக்கு வேண்டும் பொருட்கள் வாங்கிப் போட்டேனா?
உனக்குச் சேலை ஒன்று வாங்கிக் கொடுத்தேனா?
எனக்குப் பன்னீர் அத்தர் பூச மறந்தேனா?

படிக்கும் பிள்ளை நடுக்கம் போக்கிச் சிரித்தேனா? - ( நீ)
வடிக்கும் ரத்தக் கண்ணீர் கண்டு துடித்தேனா? - (உன்னை)
அடிக்கக் கூட செய்தே னேநான் படுபாவி! - (நீ)
தடுக்கக் கூட இல்லை யேடி அப்பாவி!

இன்னோர் பெண்தான் உன்-இடத்தில் இருந்தாலே
இந்நே ரத்தில் என்க தைதான் இருக்காதே!
என்ன நினைத்தே என்னைத் தாங்கிக் கொண்டாயோ?
முன்னை வாங்கி வந்த வரமாய்க் கண்டாயோ?

பிள்ளைக் காகப் பேடி என்னைப் பொறுத்தாயோ?
தள்ளா வயதுப் பெற்றோர் எண்ணித் தவித்தாயோ?
கொள்ளும் தாலி நிலைக்க வேண்டிக் குமைந்தாயோ?
பொல்லா இறைவன் மீதே பாரம் போட்டாயோ?

பூப்போல் போற்றிப் பொன்போல் காக்க மறந்தேனே!
ஈப்போல் பிடித்துத் தீப்போல் எரித்துக் கொன்றேனே!
தீர்ப்பின் முடிவில் என்ன வருமோ தெரியேனே!
ஆப்பு வைக்கப் பிள்ளை வருமோ அறியேனே! 9840382003

No comments:

Post a Comment