Tuesday, 14 April 2015

37 மகனோ மகளோ

மகனோ மகளோ வரப்போறான்!
மடியில் தவழ்ந்து விழப்போறான்!
அகமும் புறமும் நிறைந்தவளே!
அன்னை யானாய் ஆருயிரே!

பூத்துக் குலுங்கும் மரமானாய்!
புன்னகை வழங்கும் முகமானாய்!
காத்துக் கிடந்த எங்களுக்குக்
கண்முன் கடவுள் நீயானாய்!

காலால் உதைப்பது தெரிகிறதா?
கனமாய் நகர்வது இனிக்கிறதா?
மேலே துடிப்பது ரசிக்கிறதா?
மேனி சிலிர்த்துச் சிவக்கிறதா?

கற்பனை யில்முகம் தெரிகிறதா?
கண்களில் ஜீவன் ஒளிர்கிறதா?
பற்களில் லாத புன்னகையில்
பாசம் பொங்கி வழிகிறதா?

ஆசைப் பட்டதைக் கேள்அம்மா!
அள்ளித் தருவேன் வாங்கம்மா!
பேசிச் சிரித்து மகிழம்மா!
பிள்ளைக்கும் சேர்த்தே உண்ணம்மா!

பாரம் தூக்கக் கூடாது!
படிகள் ஏறக் கூடாது!
தூரப் பயணம் ஆகாது!
துக்கம் அச்சம் கூடாது!

பாதி வேலை நான்செய்வேன்!
பக்கத் துணையாய் நானிருப்பேன்!
பாத பூஜை செய்கின்ற
பக்தன் போல அருகிருப்பேன்!

நிலவை மலரைப் பாரம்மா!
நிறைந்த மனதோ டிருஅம்மா!
உலவிக் காற்றில் மகிழம்மா!
உயர்ந்த நினைப்பே நினையம்மா!

வீரக் கதைகள் படியம்மா!
வேந்தனைப் பெற்றுக் கொடுஅம்மா!
ஞானக் கதைகள் படியம்மா!
நல்லவ னைப்பெற்றுக் கொடுஅம்மா! 9840382003

No comments:

Post a Comment