Tuesday, 14 April 2015

23 ஒரே காதல்

சின்னஞ் சிறுபாவை; தின்னும் விழிப்பார்வை;
இன்னும் மலராதாள்; இன்றோ, நாளையோ?
அன்னை அறியாமல் யார்க்கும் தெரியாமல்
என்னை நினைக்கின்றாள்; எனக்குத் தெரியாதோ?

தோழன் வீட்டிற்குத் துணையாய்ப் போகையில்,
ஆழ நேசிக்கும் அழகுப் பூம்பாவை
தாழப் பார்க்கின்ற தணியா ஒருபார்வை
சூழ என்நெஞ்சில் சொந்தம் கேட்குமே!

வேலை இல்லாமல் வெளியில் நிற்கின்றாள்;
ஆளைப் பார்த்திட்டால் அமுதம் குடிக்கின்றாள்;
சாலை குறுக்காகத் தாவிக் கடக்கின்றாள்;
பாலு எனக்கூவிப் பைய(ன்) அழைக்கின்றாள்!

எந்தன் பார்வைக்கே ஏங்கித் தவிக்கின்றாள்;
எந்தன் வார்த்தைக்கே எதையும் செய்கின்றாள்;
வந்த பருவத்தைத் தாங்க முடியாமல்
சொந்தம் சூழ்நிலை எல்லாம் மறக்கின்றாள்!

குழந்தை என்பேனா; குமரி என்பேனா;
வழங்கும் அவள்காதல் வாங்கிக் கொள்வேனா;
அழுந்தும் மனசாட்சிக் காமாம் என்பேனா;
இழந்த என்நெஞ்சை என்தான் செய்வேனோ? 9840382003

No comments:

Post a Comment