Tuesday, 14 April 2015

45 தட்டிக் கேளடா

தட்டிக் கேளடா! - தம்பி,
தட்டிக் கேளடா! - நீ
தப்பை எங்கும் தைரியமாய்த்
தட்டிக் கேளடா!
கெட்டுப் போச்சுடா! - ரொம்பக்
கெட்டுப் போச்சுடா! - நாடு
கேள்வி கேட்க ஆளில்லாமல்
கெட்டுப் போச்சுடா!

தட்டிக்கேட்க ஆளில்லாமல் குட்டிச்சுவர் ஆச்சு! - அது
தவறுசெய்யும் மனிதருக்குத் தைரியமாய்ப் போச்சு!
வெட்டிப்பேச்சுப் பேசிப்பேசி வீரம்செத்துப் போச்சு! - இது
விளங்காத பயலுக்கெலாம் ராஜ்ஜியமாய்ப் போச்சு!

அன்றாடப் பொதுவாழ்வில் காண்போம்பல் கொடுமை! - அதை
அப்படியே விட்டுவிட்டால் ஆவோம்நாம் அடிமை!
முளையிலேயே அதைக்கிள்ளி எறிவதுநம் கடமை! - பின்
முற்றவிட்டு அலறுவது மடமையிலும் மடமை!

கொடுமைகள் அனுபவிக்கும் யார்மனமும் குமுறும்! - உள்
கொதித்தாலும் அதைஎதிர்க்கத் தைரியந்தான் குறையும்!
நீதட்டிக் கேட்டுவிட்டால் ஆதரவு குவியும்! - பின்
நியாயத்தின் கையோங்கி அநியாயம் மறையும்!

தனிமனித ஒழுக்கங்கள் குறைந்ததன் விளைவு! - இன்று
சமூகத்தில் அரசியலில் மோசடிகள் மலிவு!
வாய்ப்பிருந்தால் எல்லாரும் தவறுசெய்ய விழைவார்! - இதில்
வாய்கொண்டு யார்யாரைக் கேள்விகேட்க விடுவார்?

நீமட்டும் யோக்கியமா என்றுதானே கேட்பார்?
நியாயந்தா னேஅதுவும்?யாரிதனை மறுப்பார்?
பணத்தையே அளவுகோலாய் வைத்திருக்கும் வரைக்கும்
பண்பாடு ஒழுக்கமெல்லாம் காற்றினிலே பறக்கும்!

............................................ 9840382003

No comments:

Post a Comment