Tuesday, 14 April 2015

50 முடிந்ததைக் கிளறாதே

உன்னை மறந்துவிட்டேன் தங்கமே தங்கம்! - மனதில்
உனக்கினிமேல் இடமில்லை தங்கமே தங்கம்!
ஒருகாலம் காதலித்தோம் தங்கமே தங்கம்! - அது
உலகிற்குப் பிடிக்கவில்லை தங்கமே தங்கம்!

ஆண்டவனும் விரும்பவில்லை தங்கமே தங்கம்! - இனி
அதைநினைத்து என்னபயன் தங்கமே தங்கம்?
அந்தக் காலமா தங்கமே தங்கம்? - நாம்
அரளியைத் தின்பதற்கு தங்கமே தங்கம்?

ஓடிப் போகவா தங்கமே தங்கம்? - அது
ஒத்து வராதடி தங்கமே தங்கம்!
ஒரேஎ முடிவுதான் தங்கமே தங்கம்! - அது
ஒற்றுமையாய்ப் பிரிவதுதான் தங்கமே தங்கம்!

சொன்ன வார்த்தையெல்லாம் தங்கமே தங்கம் - நான்
சுத்தமாய் அழித்துவிட்டேன் தங்கமே தங்கம்!
சுற்றித் திரிந்ததெல்லாம் தங்கமே தங்கம் - நான்
சொப்பனமாய் மறந்துவிட்டேன் தங்கமே தங்கம்!

புகைப்படம் எடுத்ததெல்லாம் தங்கமே தங்கம் - நான்
பொசுக்கித் தள்ளிவிட்டேன் தங்கமே தங்கம்!
புன்னகை முகத்தையும் தங்கமே தங்கம் -நான்
போக்கித் துடைத்துவிட்டேன் தங்கமே தங்கம்!

வீட்டில் பார்ப்பவளைத் தங்கமே தங்கம் - நான்
விரைவில் மணமுடிப்பேன் தங்கமே தங்கம்!
விருப்பம் இருந்தால்வா தங்கமே தங்கம்! - எதையும்
வெளியில் காட்டாதே தங்கமே தங்கம்!

என்னை நினைத்துக்கொண்டு தங்கமே தங்கம் - நீ
உன்வாழ்வைக் கெடுக்காதே தங்கமே தங்கம்!
என்னைநம்பி வருபவட்குத் தங்கமே தங்கம் - நான்
என்றுமுண்மை யாயிருப்பேன் தங்கமே தங்கம்!

ஒருகதவு மூடிவிட்டால் தங்கமே தங்கம் - வாழ்வில்
ஒருகதவு திறந்துவிடும் தங்கமே தங்கம்!
மூடியதைப் பார்க்காதே தங்கமே தங்கம்! - அது
முடிந்துபோன கதையடி தங்கமே தங்கம்!

விபத்துப்போல் நடந்ததடி தங்கமே தங்கம்! - அதில்
இருவர்க்கும் காயமடி தங்கமே தங்கம்!
காயத்தை ஆற்றிடுவோம் தங்கமே தங்கம்! - இனிக்
கவனமாய் நாமிருப்போம் தங்கமே தங்கம்! 9840382003

No comments:

Post a Comment