Tuesday, 14 April 2015

5 ஏழையாய்ப் பிறந்ததற்கு வருத்தப் படாதே


தம்பி,
ஏழையாய்ப் பிறந்ததற்கு வருத்தப் படாதே! - உனக்கு
எதிர்காலம் நிறையவுண்டு முயற்சி விடாதே!
தெருவிளக்கில் படித்தவரும் மேதை யாகலாம்! - ஒரு
தினக்கூலி மகன்கூட நாட்டை யாளலாம்!

சின்னச்சின்ன மனங்களிலே தோன்றும் லட்சியம்,
சிறுகனலாய்ப் பெருநெருப்பாய் மாறும் நிச்சயம்!
முன்னேறு படிப்படியாய் ஊக்கம் முக்கியம்! - எதையும்
முயற்சியினால் அடைவதுவே வாழ்க்கைத் தத்துவம்!

குறிக்கோளைத் தெளிவாக வகுத்துக் கொள்ளடா! - தினம்
கொஞ்சங்கொஞ்ச மாய்அதனை நெருங்கிச் செல்லடா!
நெருப்பாறு மறித்தாலும் தாண்டிச் செல்லடா! - உன்
நேர்மைக்கும் உழைப்பிற்கும் காலம் உண்டடா!

பணத்திற்காக வெளிநாடு சென்று விடாதே! - உன்
பாரதத்தாய் மனம்நோகச் செய்து விடாதே!
ஜனத்திற்காகப் போராட மறந்து விடாதே! - உன்
தாய்நாட்டை முன்னேற்றத் தவறி விடாதே!

மக்களோடு மக்களாகக் கலந்து நில்லடா! - நல்ல
மாற்றங்கள் வருவதற்குத் தலைமை தாங்கடா!
சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தெய்வம் உண்டடா! - உன்
தியாகங்கள் வரலாற்றில் நிற்கும் மெய்யடா! 9840382003

No comments:

Post a Comment