Tuesday, 14 April 2015

18 இலஞ்சம் கொடுத்துப் பழக்காதே

இலஞ்சம் கொடுத்துப் பழக்காதே! - நீ
நல்ல வனையும் கெடுக்காதே!

ஒருவன் கொடுத்துப் பழக்கிவிட்டால் - அவன்
ஒவ்வோ ரிடமும் எதிர்பார்ப்பான்! - பின்
ஒழுங்காய் வேலை செயமாட்டான்! - பதில்
உரைக்கக் கூட பணம்கேட்பான்!

கொடுக்கா தவனை அவமதிப்பான்!
கோபம் கொண்டு அலைக்கழிப்பான்!
கொடுத்துத் தொலைவோம் எனும்நிலைக்குக்
கொண்டு வந்து பல்லிளிப்பான்!

பணத்தின் ருசியைக் காட்டிவிட்டால் - அது
பைத்தியம் பிடித்து அலையவைக்கும்!
குணத்தில் சாது வானவனும்
குண்டர் போல நடக்கவைக்கும்!

உரிமம் தருகிறேன் கொடுஎன்பான்!
உண்மை மறைக்கிறேன் கொடுஎன்பான்!
தருகிறேன் வேலை கொடுஎன்பான்!
தவறைச் செய்துகொள் கொடுஎன்பான்!

காட்டில் மரங்கள் வெட்டப்படும்!
ஆற்றில் மணலும் அள்ளப்படும்!
நாட்டின் வளங்கள் சுரண்டப்படும்!
நன்னீர் சோற்றுக்குப் பஞ்சம்வரும்!

சாலையில் தார்போய் கல்லிருக்கும்!
கூரையில் கம்பி பல்லிளிக்கும்!
வெள்ளம் சூழ்ந்தால் வடியாது!
வேதனை வந்தால் விடியாது!

அரசின் வருவாய் சுருங்கிவிடும்!
அயலார் கடனும் பெருகிவிடும்!
பெரிய திட்டம் பணமின்றிப்
பேச்சள வோடு நின்றுவிடும்!

சமூக விரோதச் செயல்பெருகும்!
சட்டவிரோதப் பணம்பெருகும்!
தேசத் துரோகம் குழிபறிக்கும்!
தெய்வக் குற்றம் வழிமறிக்கும்!

பாடு பட்டவன் மனம்நோவான்!
பங்கு கேட்டவன் தினம்வாழ்வான்!
கேடு கெட்டவன் அரசாள்வான்!
கேள்வி கேடடவன் தரைவீழ்வான்!

நீதி நேர்மை பார்க்காது! - லஞ்சம்
நெஞ்சில் இரக்கம் காட்டாது!
போதும் என்று நிறுத்தாது! - கை
புத்த னிடமும் மடங்காது!

நாட்டைப் பற்றி நினைக்காது!
நன்றி என்பதும் இருக்காது!
போட்டி போட்டுப் பொன்குவிக்கும்!
புதைத்து வைத்துப் பேய்சிரிக்கும்! 9840382003

No comments:

Post a Comment