Tuesday, 14 April 2015

14 பாவ மன்னிப்பு - இறைவனிடம்

பெற்றோர் மூலம் பெற்ற பீடை ஒருகோடி!
உற்றார் உறவோர் ஒதுக்கி வைத்த ஒருகேடி!
கற்றோர் கண்ணில் இன்னும் படாத கடைக்கோடி!
வற்றா நதிபோல் வடிக்கும் கண்ணீர் எதற்கோடி?

வாழ்வே என்றன் வீட்டுப் பக்கம் வாராயோ?
நோவே என்னை நோகச் செய்தல் போதாதோ?
சாவே நீதான் தள்ளிப் போகக் கூடாதோ?
தேவே கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஆகாதோ?

அழுகை தவிர அழகு நெஞ்சில் அறியேனே!
விழுகை தவிர வெற்றி கண்ணில் தெரியேனே!
கழுதை போலக் கவலை சுமந்தே இளைக்கின்றேன்!
பழுதை நீக்கப் பரமா உன்னை அழைக்கின்றேன்!

கழுதை என்முன் காரட் கட்டி விட்டாயே!
புழுதி பறக்கப் பறக்க ஓடி ஓய்ந்தேனே!
விழுந்து சிரித்தாய் விளையாட் டிதுவோ பெருமாளே?
எழுந்து சிரிக்க வைப்பாய் என்றோ திருநாளே?

வாயால் செய்த பாவம் ஒன்றோ இரண்டல்ல!
கையால் செய்த பாவம் சொல்லும் தரமல்ல!
பையில் பணமும் மெய்யில் அழகும் இழந்தேனே!
நோயில் நொந்து பாயில் வந்து விழுந்தேனே!

ஐயோ இறைவா இன்னும் என்னைக் கொல்லாதே!
கையால் கழுத்தைப் பிடித்து நரகில் தள்ளாதே!
மெய்யாய் இனிஇவ் வுடம்பு எதையும் தாங்காதே!
செய்வாய் கருணை பெய்வாய் அருளை நீங்காதே!

சரியாய்க் குணங்கள் அமையாக் குற்றம் தவிக்கின்றேன்!
பெரிதாய் எதையும் சாதிக் காமல் பிழைக்கின்றேன்!
அரிதாய் நடக்கும் அதிச யம்போல் வாராயோ?
விரைவாய் என்னை மாற்றி மேன்மை தாராயோ?

அச்சப் பட்டும் வெட்கங் கெட்டும் அழிந்தேனே!
எச்சில் இலையில் மிச்சப் பட்டே விழுந்தேனே!
உச்சந் தொட்டு மச்சம் பெற்றே வாழ்வேனோ?
உச்சுக் கொட்டப் பச்சக் கென்று வீழ்வேனோ?

நீயும் என்னைக் கைவிட் டால்நான் என்செய்வேன்?
நாயும் துரத்தும் நலிந்த வாழ்க்கை வாழ்கின்றேன்!
காயம் பட்ட மனதால் உன்னைத் துதிக்கின்றேன்!
மாயம் செய்ய வாடா கண்ணா அழைக்கின்றேன்!

தூங்கி எழுந்தால் துயரம் நீங்கும் வரம்வேண்டும்!
தாங்கிப் பணிந்தால் தலைகீழ் மாற்றம் வரவேண்டும்!
வீங்கி யழுத கண்ணில் வெற்றி படவேண்டும்!
ஏங்கித் தவிக்கும் நெஞ்சை இறைநீ தொடவேண்டும்! 9840382003

No comments:

Post a Comment