Tuesday, 14 April 2015

2 பணி நிறைவு பெற்றேன்


ஊரில் எனக்கொரு மதிப்பைத் தந்ததும்,
உற்றார் உறவினர் மத்தியில்
பேரைத் தந்ததும், பிழைப்பைத் தந்ததும்,
பெரிய மனிதரும் வணங்கிடும்
சீரைத் தந்ததும், சிறப்பைத் தந்ததும்,
செல்வ வளர்ச்சியைத் தந்ததும்,
பாரில் நல்லதோர் மனைவி தந்ததும்,
பழக்க வட்டங்கள் தந்ததும்,

உடன்பி றந்தவர் படிக்க வைத்ததும்,
உற்ற தந்தைநோய் தீர்த்ததும்,
கடனும் உடனுமாய்த் தங்கை மார்களைக்
கட்டிக் கொடுத்ததும் காத்ததும்,
உடைமை யாகவே வீடு, வாகனம்,
உரொக்கம், நகையெனச் சேர்த்ததும்,
பிடியில் சேர்மரு மகன்கள் வந்ததும்,
பேரன் பேத்திகள் எடுத்ததும்,

இந்த வேலையால் தானே? இறைவனே,
இன்று இதனைநான் முடிக்கிறேன்!
முந்தும் உணர்ச்சிகள் முட்டிச் சூழ்ந்தெனை
மூழ்க டிக்குதே வெள்ளமாய்!
இன்ப உணர்ச்சியும் துன்ப உணர்ச்சியும்
என்னைக் கௌவுதே மௌனமாய்!
என்ன சொல்லுவேன்? என்ன செய்குவேன்?
இதயம் கொல்லுதே சன்னமாய்!

அரசுத் துறையினில் அறிவு, செயல்திறன்,
அகவை, அனுபவம் எதற்குமே
உரிய மதிப்பிலை; உழைப்பிற் குயர்விலை;
உளைந்து சாவதில் பயனிலை!
பெரிய துரையையும் சிறிய வேலையாள்
பேரைச் சொல்லியே மிரட்டுவான்!
நரிகள் போன்றவர் நயக்கும் துறையது;
நமக்குச் சரிப்பட வில்லையே!

எனக்கொர் திறமையை இறைவன் நல்கினான்
இனிய கவிதைகள் புனைவது;
மனத்தில் இதனைநான் வைத்து மறுகியே
வாழ்க்கை இதுவரை கழிந்தது!
அனைத்தும் அறிந்தவா! குடத்து விளக்கினை
அகிலம் அறியவே ஏற்றுவாய்!
இனிக்கும் தீந்தமிழ் மணக்கும் பூந்தமிழ்
என்னை யாளவே மாற்றுவாய்! 9840382003

3 தாத்தா ஆகிவிட்டேன்

பேத்தி பிறந்துவிட்டாள்! - எனக்குப்
பெருமை தாங்கவில்லை!
தாத்தனாய் ஆகிவிட்டேன்! - தனனா
தந்தன தந்தனனா !

மகளைப் பெற்றதினும் - மகிழ்ச்சி
மனதில் மூண்டதடா!
தகவல் வந்ததுமே - எனக்குத்
தலைகால் புரியவில்லை!

ஓடி அருகடைந்தேன்! - பேத்தி
ஒருமுழம் குறைவே!
மூடி இமைவழியே - என்
முகத்தைப் பார்த்துவிட்டாள்!

ஆழ்ந்த உறக்கத்திலே - அவளின்
அமைதித் தோற்றத்திலே
வீழ்ந்துவிட் டேன்நானே! - இன்னும்
வியப்பு மாறவில்லை!

குட்டிக்குட்டிக் கால்கள்! - அழகுக்
குட்டிக்குட்டிக் கைகள்!
குட்டிச் சிறுவயிறு! - பூப்போல்
குட்டியாய் வட்டமுகம்!

கையும்காலும் மடித்து - இன்னும்
கருவில் உள்ளதுபோல்
வாயுமகண்ணும் மூடி - இருக்கும்
வடிவை என்னசொல்வேன்!

அற்புதம் என்னவென்பேன்! - ஆண்டவன்
அறிவை என்னவென்பேன்!
முற்றிலும் பிஞ்சுவண்ணம்! - தெய்வீகம்
முகத்தில் கொஞ்சிமின்னும்!

தொட்டால் திடுக்கிடுவாள்! - தோலில்
தொட்ட விரல்அமுங்கும் !
விட்டால் குருதிவெள்ளம் - பாய்ந்து
மேலும் சிவந்துவிடும்!

தூக்கப் பயம்எனக்கு! - சிசுஉடல்
துவளும் கீரையன்றோ!
பார்க்க வியப்பெனக்கு! - சிசுவே
படைப்பின் விந்தையன்றோ!

அழுதல் சப்பிடுதல் - இவையே
அவள் அறிந்தவையாம்!
பழகிப் பின்அறிவாள் - நம்மைப்
பார்த்துத்தான் மற்றதெல்லாம்!

நல்லவர் மட்டிலுமே - அதனால்
நன்றவள் முன்வருக!
அல்லவர் போய்விடுக! - நுங்கள்
அலுவல் பார்த்திடுக!

தந்தையின் சாயலென்பார்! - சிலர்
தாயினைப் போலவென்பார்!
வந்தது தெய்வமென்றேன்! - நம்
வாழக்கையைக் காக்குமென்றேன்!

பூமியாம் தாய்மடியில் - இவள்
புதிய நல்வரவு!
சாமித் தயவினிலே - என்
சந்ததி வாழ்கநன்றே! 9840382003

4 ஒரு திரை இசைப் பாடல்

பல ஆண்டுகளுக்கு முன்னர், இசைஞானி இளையராஜா, குமுதம் வாசகர்களுடமிருந்து
ஒரு பாடலாசிரியரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று, ஒரு தத்த காரத்தையும்,
பாடலுக்கான ஒரு சூழ்நிலையையும் கொடுத்திருந்தார்.
அதற்கேற்ப எழுதிப் பார்த்த பாடல்:

பல்லவி
************
( காதலின் ஆரம்ப அடையாளங்களை உணர்தல்)

தனனனனா னன னானானனா
தனனனனா னன னானானனா

தன்னன்னன னானா
தன்னன்னன னானா
தன்னன்னன னானா
தன்னன்னன னானா

தானா னான னானா னான னானா!

அடிக்கடிஏன் உனை நான்பார்க்கிறேன்?
அதுபுரிந்தால் சிரி, நாள்பார்க்கிறேன்!

கண்ணில்பரி பாஷை!
நெஞ்சில்புது வேட்கை!
பெண்ணுள்எழும் ஆசை!
வெட்கச்சிரிப் போசை

கேட்டேன்! வாழ்வில் நீதான் வேண்டும், வா!வா!

சரணம் 1
**************
( இப்படி ஒரு பெண்ணா என வியத்தல் )

தன
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா
னனனனனன னா னனனனனா

தன்னன னன னானானா
தன்னன னன னானானனா
த்ன்னன னன னானானா
தன்னன னன னானானனா

தனனன னனனா னனனனனா
தனனன னனனா னனனனனா

உனைப்
பகலும்இரவும் நான் நினைக்கவைத்தாய்!
பணியும்உணவும் நான் மறக்கவைத்தாய்!
கண்ணில்படும் அழகே இந்தவிதமோ!
இன்னும்உள்ள அழகே எந்தவிதமோ!

இப்படி ஒரு பாவையை
இத்தனை தினம் காணாமலே
எப்படிப் புவி வாழ்ந்தேனோ,
எவ்விதச் சுகம் காணாமலே?

பருவத்தின் அழகால் கவர்ந்துவிட்டாய்!
பழகிடும் அழகால் உயர்ந்துவிட்டாய்!

மாலை நாளை தோளில் வீழாதோ? ....

சரணம் 2
**************

எனைத்
தொடுதொடுஎனப் பூ முகம்சொல்லுதே!
பிடிபிடிஎன நூல் இடைகெஞ்சுதே!
ஒருமுறை கலந்தால் துயர்விடுமோ!
உள்ளம்பொங்க அணைத்தால் சொர்க்கம்வருமோ!

கண்ணுறக் கமும் காணாதோ,
கன்னியின் மடி சாயாமலே?
பெண்மயக் கமும் தீராதோ,
பிஞ்சுமுத் தங்கள் தாராமலே?

எனக்கெனப் பிறந்தே வளர்ந்தவள்நீ!
உனக்கெனச் சிறந்தே உயர்ந்தவன்நான்!

பாலும் தேனும் ஆறாய் ஓடாதோ? .... 9840382003

5 ஏழையாய்ப் பிறந்ததற்கு வருத்தப் படாதே


தம்பி,
ஏழையாய்ப் பிறந்ததற்கு வருத்தப் படாதே! - உனக்கு
எதிர்காலம் நிறையவுண்டு முயற்சி விடாதே!
தெருவிளக்கில் படித்தவரும் மேதை யாகலாம்! - ஒரு
தினக்கூலி மகன்கூட நாட்டை யாளலாம்!

சின்னச்சின்ன மனங்களிலே தோன்றும் லட்சியம்,
சிறுகனலாய்ப் பெருநெருப்பாய் மாறும் நிச்சயம்!
முன்னேறு படிப்படியாய் ஊக்கம் முக்கியம்! - எதையும்
முயற்சியினால் அடைவதுவே வாழ்க்கைத் தத்துவம்!

குறிக்கோளைத் தெளிவாக வகுத்துக் கொள்ளடா! - தினம்
கொஞ்சங்கொஞ்ச மாய்அதனை நெருங்கிச் செல்லடா!
நெருப்பாறு மறித்தாலும் தாண்டிச் செல்லடா! - உன்
நேர்மைக்கும் உழைப்பிற்கும் காலம் உண்டடா!

பணத்திற்காக வெளிநாடு சென்று விடாதே! - உன்
பாரதத்தாய் மனம்நோகச் செய்து விடாதே!
ஜனத்திற்காகப் போராட மறந்து விடாதே! - உன்
தாய்நாட்டை முன்னேற்றத் தவறி விடாதே!

மக்களோடு மக்களாகக் கலந்து நில்லடா! - நல்ல
மாற்றங்கள் வருவதற்குத் தலைமை தாங்கடா!
சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தெய்வம் உண்டடா! - உன்
தியாகங்கள் வரலாற்றில் நிற்கும் மெய்யடா! 9840382003

6 அந்தத் துடிப்பு உனக்கும் இருந்தால்


வேலை தேடியே - வாடி
மெலியும் தோழனே!

எழுத்து கூட்டிப் படிப்பவன் கூட
எஜமான் ஆகிறான் நாட்டிலே! - நீ
எம்.ஏ. படித்து இன்னும் படித்து
ஏமாந்து நிற்கிறாய் ரோட்டிலே!
வேலை வேலை என்றே இருந்தால்
வீட்டுக்கு வருமா கூப்பிட? - நீ
விவரமாய் இருந்தால் விருந்தே வைக்கலாம்
ஊரெல் லாமும் சாப்பிட!

அப்பன் சொந்தத் தொழிலில் இருந்தால்
அவன்மக னுக்குக் கவலையில்லை!
எம்.பி., எம்.எல்.ஏ பழக்கம் இருந்தால்
எவன்மக னுக்கும் கவலையில்லை!
நோட்டை நீட்ட வசதி இருந்தால்
நூற்றுக்கு நூறு கவலையில்லை! - நீ
ஒன்றுமில் லாமல் படித்தி ருந்தால்
ஒருவ ருக்கும் பயனில்லை!

படித்தால் முதல்பத்துப் பேரில் ஒருவனாய்ப்
பாடத்தை நீயும் படிக்கணும்! - இல்லை,
பைக்கட்டைத் தூக்கித் தலைசுற்றி வீசிப்
பாதையை மாற்றிப் போகணும்!
உனக்கு வேண்டிய அறிவை நீயே
ஓடி ஓடித் தேடணும்!
உழைப்பால் உயர்ந்தவன் என்றபட் டத்தை
உலகம் உனக்குச் சூடணும்!

அரசுப் பணிதான் பாப்பேன் என்றால்
அதற்குள் வயசு போய்விடுமே! - நீ
அழுக்குப் படாமல் இருப்பேன் என்றால்
ஆயுசு முழுதும் தீர்ந்திடுமே!
உழைக்கும் தொழிலில் கௌரவம் பார்த்தால்
உருப்ப டாமல் போய்விடுமே! - நீ
ஒரேஎ மனதாய்த் தொழிலில் இறங்கு
ஊரில் கஷ்டம் நீங்கிடுமே!

பெட்டிக் கடைபோல் வைத்தவர் எல்லாம்
பெருந்தன வந்தர் ஆகலையா? - இங்கே
பிழைப்புத் தேடித் போனவர் எல்லாம்
பேர்புகழ் பெற்று வாழலையா?
சிறிதாய் ஒன்றை முதலில் துவங்கு
தெய்வம் துணையாய் நிற்காதா? - உன்
சிந்தை அதிலே செல்லச் செல்லச்
சிறந்த வழிதான் தோன்றாதா?

சொந்தத் தொழிலின் சுதந்தி ரத்தை
அனுப வித்துப் பார்க்கணும்! - நீ
தூக்க நடுவில் விழித்தால் கூட
தொழில்நி னைப்பு இருக்கணும்!
போட்டி போடும் உலகில் எதையும்
புதுமை யாகச் செய்யணும்! - உன்
புத்தியிலே முன்னேற் றந்தான்
பொழுது போக்காய் அமையணும்!

எந்தத் தொழிலும் இழிவில்லை என்ற
எண்ணத்தை இதயத்தில் ஏற்றுப்பார்! - நீ
இழிவாய் நினைக்கும் தொழிலில் கூட
இலட்சங்கள் புரள்வதை யோசிப்பாய்!
அற்பப் படிப்பு மனிதர்கள் அதிலே
அதிசயம் புரிவதை நேசிப்பாய்!
அந்தத் துடிப்பு உனக்கும் இருந்தால்
அற்புத வாழ்வைச் சந்திப்பாய்! 9840382003

7 நீ பிறந்திருக்கும் நாடு


நீபிறந்தி ருக்கும்நாடு இந்தி யாவடா! - அது
நேற்றிருந்த நிலையைக்கொஞ்சம் எண்ணிப் பாரடா!
வாயிருந்தால் அழுதுவிடும் உண்மை தானடா! - அதன்
மைந்தனாகப் பிறந்தநீயும் செய்வ தென்னடா?

உலகத்திற்கே நாகரீகம் கற்றுத் தந்தது! - இன்று
உழவர்களே தூக்குப்போடும் நிலைக்கு வந்தது!
ஞானிகளும் வீரர்களும் தலைமை பூண்டது! - இன்று
நாசகார சக்திகளின் பிடியில் வீழ்ந்தது!

மனிதனென்று பிறந்துவிட்டால் ஜாதி ஒன்றுதான்!
மனமுருக வேண்டிவிட்டால் தெய்வம் ஒன்றுதான்!
நேர்மையாகப் பாடுபட்டால் தொழிலும் ஒன்றுதான்!
நீபிறந்த நாட்டிலிவை தோன்றும் என்றுதான்?

அடிமையாய் இருந்திருந்து புத்தி மழுங்கிட்டோம்!
அந்நியனைப் பெரியவனாய் நினைத்துப் பழகிட்டோம்!
அதிகாரம் செய்வோர்க்கென்றும் அடங்கிக் கிடந்திட்டோம்! - அவன்
அநியாயம் செய்தபோதும் எதிர்க்கப் பயந்திட்டோம்!

......................................... 9840382003

8 பொது மக்களே பொது மக்களே


பொது மக்களே! பொது மக்களே! - ரொம்பப்
புத்திகெட்டுப் போனீர்கள் பொதுமக்களே!

அரசாங்கம் சரியில்லை என்று சொல்கிறீர்! - பின்
அவனிடமே துட்டைவாங்கி ஓட்டுப் போடுறீர்!

லஞ்சவூழல் பெருகிப்போச்சு என்று கத்துறீர்! - வீட்டில்
லஞ்சம்வரும் மாப்பிள்ளைக்கே பெண்ணைக் கொடுக்கிறீர்!

கொள்ளை அடிக்கிறான் பாவி என்று குதிக்கிறீர்! - பணத்தைக்
கொட்டியந்தப் பள்ளியில்தான் மகனைச் சேர்க்கிறீர்!

ஆபாசம் ஆபாசம் என்று கொதிக்கிறீர்! - தினம்
அந்தப்பெட்டி முன்புதானே பொழுதைக் கழிக்கிறீர்?

அநியாயம் அநியாயம் என்று சொல்லியே - அந்த
அநியாயத் தில்நீரும் பங்கு கொள்கிறீர்!
அநியாயத் தைஒழிக்கச் சக்தி இல்லையா? - கையில்
அதைவெட்டி எரிகின்ற கத்தி இல்லையா?

ஒற்றுமையின் பலமறிந்து ஒன்று பாடுங்களேன்!
உள்ளத்தில் பயமொழிந்து குரல் கொடுங்களேன்!
முதல்மாற்றம் உங்களுக்குள் கொண்டு வருங்களேன்!
முழுவதும் மாறிவரப் பாடு படுங்களேன்! 9840382003

9 ஆசைப் பட்டால் போதாது


ஆசைப் பட்டால் போதாது;
அடைந்து காட்டு!
நினைத்தால் மட்டும் போதாது;
நிகழ்த்திக் காட்டு!
கனவு கண்டால் போதாது;
கண்ணில் காட்டு!
வாயால் சொன்னால் போதாது;
செய்து காட்டு!

திட்டம் இன்றிப் பயணம் போனால்
திக்கெல் லாமும் இருளே!
திறமை இன்றி ஆசைப் பட்டால்
தெரியும் கானல் நீரே!
முயற்சி இன்றிக் கனவு கண்டால்
முடவன் கொம்புத் தேனே!
தோல்வி கண்டு துவண்டு போனால்
தோன்றும் எட்டாக் கனியே!

முட்டி முட்டி முளைக்கும் விதையின்
முனைப்பு வேண்டும்!
வெட்ட வெட்ட முளைக்கும் கிளையின்
வேகம் வேண்டும்!
தட்டத் தட்டத் தாவும் பந்தின்
தாகம் வேண்டும்!
பட்டுப் பட்டுப் படித்த பாடம்
பலிக்க வேண்டும்! 9840382003

10 காளியின் நாக்கு


'காளியின் நாகேன் கடைசி வரையிலும்
கீழே தொங்கிக் கிடக்குது வெளியே?
நாக்கைக் காட்டி நவில்வது என்ன?'
என்றே கேட்பின் எடுத்துரைப் பேன்நான்:

நாக்கை அடக்கிப் பேசுக! நாட்டில்
பேச்சால் தானே பிரச்னை எல்லாம்?
தம்பதி பிரிவதும், சகோதரர் பிரிவதும்,
நண்பர்கள் பிரிவதும், நாடுகள் பிரிவதும்
ஒழுங்கிலாப் பேச்சின் ஒருசில வார்த்தையால்
தானே? அதனால் தன்மையாய்ப் பேசினால்
பெரும்போர் கூட பேரிழப் பின்றிச்
சமரசம் எய்திச் சந்தோஷ மாகும்!
ஆகையால் நாக்கை அடக்கிப் பேசுக!

அன்பாய்ப் பேசுக! அமைதியாய்ப் பேசுக!
அறிவாய்ப் பேசுக! அளந்து பேசுக!
நல்லதே பேசுக! நயந்து பேசுக!
யாரிடம் எங்கே எதனைப் பேசணும்,
எப்படிப் பேசணும், எப்போது பேசணும்,
எவ்வளவு பேசணும் என்ப தெல்லாம்
தெரிந்து பேசுக! தெளிவாய்ப் பேசுக!

பொய்பே சாதீர்! புறங்கூ றாதீர்!
குறைசொல் லாதீர்! கோள்மூட் டாதீர்!
குறுக்கே பேசிக் குழப்பமூட் டாதீர்!
எதிர்த்துப் பேசி இழந்துவி டாதீர்!
சிறியோ ரிடத்தும் சிரித்துப் பேசுக!
ஐயந் திரிபற அழகாய்ப் பேசுக!
பணிந்து பேசுக! பாராட்டிப் பேசுக!
பேச வேண்டிய இடத்தில் பேசுக!
பேசா மௌன விரதமும் பேணுக!

இப்படிப்
பேச்சால் நிகழும் பெரும்பெரும் செயலெலாம்
பார்ப்போர் மனத்தில் பசுமரத் தாணிபோல்
பதியச் செய்யவே பயங்கரக் காளி
முழுநாக் கினையும் முகம்கீழ் தொங்க
விட்டுக் காட்டி விழிப்புறச் செய்கிறாள்!

அடுத்த தாக நாச்சுவைக் காக,
கண்டநே ரத்தில் கண்டதைத் தின்று
கண்ட்நோய் பெற்றுத் தண்டனை போல
உடலும் உள்ளமும் வருந்தற்க மனிதா!
நாச்சுவைக் காக நலமிழக் காதே!

செரித்தே உண்க! சேர்வதே உண்க!
அரைத்தே உண்க! அளவாய் உண்க!
பறித்த காய்களும் பழங்களும் உண்க!
பதனப் பெட்டியில் பத்துநாள் வைத்துச்
செத்த உணவைச் சீஎனக் கொள்க!
சமைக்கா உணவைச் சத்தாய் உண்க!
உலர்பழம் பருப்புக் கொட்டைகள் உண்க!
உண்ணா விரதமும் இருந்து பழகுக!

கள்குடிக் காதே! தூள்ஒதுக் காதே!
புகைஇழுக் காதே! புலால்உண் ணாதே!
சாறுகள் குடிப்பாய்! இரசங்கள் குடிப்பாய்!
கொதித்துப்பின் ஆறிய நீரே குடிப்பாய்!
உமிழ்நீ ரெல்லாம் உள்ளே அனுப்புவாய்!

என்றிவை களையும் எடுத்துச் சொல்லவே
இரத்தச் சிவப்பு நாக்கைக்
காளி நீட்டிக் காட்டு கின்றாள்!
***************************************************************************************

உண்பதும் உரைப்பதும் நாவின் பணிகள்!
ஒழுங்காய் இவற்றைநாம் உலகில் செய்யவே
உணர்த்தும் காளியை உவப்புடன் போற்றி
நாவால் உயர்ந்து நலம்பெறு வோமே! 9840382003

11 பாவ மன்னிப்பு - தாயிடம்

தாயே உன்னைத் தவிக்க விட்ட பாவிநான்!
நோயே தாக்கி நொந்து பாதி உயிராகப்
பாயே கதியாய்ப் படுத்துக் கிடந்த அப்போதும்
தீயே போலும் சொற்கள் வீசிச் சுட்டேனே!

என்ன கதிதான் எனக்குக் கிடைக்கும் அறியேனே!
அன்ன மற்று நீரு மற்றே அழிவேனோ?
சின்ன பின்ன மாகித் தெருவில் சிதைவேனோ?
சொன்ன வாயில் புற்று வைத்தே புதைவேனோ?

அருந்து அருந்து என்று பாலைத் தந்தாயே!
மருந்து கூட வாங்கித் தராமல் கொன்றேனே!
திருந்த மாட்டான் என்றே உறுதி கொண்டாயோ?
இருந்து பயனே இல்லை என்று சென்றாயோ?

தந்தை இறந்த பிறகு வந்தாய் என்வீடு!
பொந்து போன்ற அறைக்குள் அடைத்தேன் கையோடு!
நிந்தை செய்தே நித்தம் இட்டேன் பழஞ்சோறு!
கந்தை மாற்றக் கையை விரித்தேன் திமிரோடு!

வாசற் படிக்கே வராதே என்று விதித்தேனே!
வீசும் காற்றும் கிடையா தென்று குதித்தேனே!
பேசக் கண்டால் பிள்ளை களையும் உதைத்தேனே!
ஓசைப் படாமல் உன்றன் உயிரைக் குடித்தேனே!

தாய்க்குச் செய்த கொடுமைக் களவே இல்லையே!
பேய்க்குக் கூட என்னைப் பிடிக்க வில்லையே!
நாய்க்குக் கூட நக்க மகிழ்ச்சி இல்லையே!
தீக்கும் சுட்டால் அதற்குத் தானே தொல்லையே!

யார்தான் சாபம் இட்டார் அம்மா நம்மீது?
ஊரார்க் கென்ன கொடுமை செய்தோம் எப்போது?
யாரால் இந்த நிலைமை மாறும் இப்போது?
சீரும் சிறப்பும் வாழ்வில் வருமோ தப்பாது?

வலிவந் தாலும் உன்னைத் தானே நினைக்கின்றேன்!
கிலிவந் தாலும் உன்னைத் தானே நினைக்கின்றேன்!
பலியா காமல் என்றன் உயிரைக் காப்பாயே!
ஒலியாய் என்றன் உள்ளக் குரலாய் ஒலிப்பாயே!

செய்த பாவம் எல்லாம் தாயே மன்னிப்பாய்!
வைத வார்த்தை மனம்வைக் காமல் சிந்திப்பாய்!
பெய்த கண்ணீர் பாவம் கழுவ நிற்கின்றேன்!
கொய்த மலர்கள் கொட்டிப் பாதம் பணிகின்றேன்!

கண்ணைக் காட்டுன் கருணை மழையில் குளிக்கின்றேன்!
புண்ணை ஆற்றிப் புதிய பிறவி எடுக்கின்றேன்!
மண்ணில் நல்ல மனித னாகத் துடிக்கின்றேன்!
எண்ணம் மூச்சில் இயங்கு காலைப் பிடிக்கின்றேன்! 9840382003

12 பாவ மன்னிப்பு - மனைவியிடம்

பெண்ணே என்னை மணந்திங் கென்ன சுகம்கண்டாய்?
மண்ணே விழுந்த வாழ்வைத் தானே தினம்கண்டாய்!
கண்ணே மணியே என்றா காதல் மொழிகேட்டாய்?
புண்ணே செய்த போதும் மடியில் இடம்கேட்டாய்!

படித்தாய் பட்டம் பெற்றாய் நல்ல பணிபெற்றாய்!
தடித்தாய் என்கைப் பிடித்தாய் அந்தோ மெலிந்தாயே!
நடித்தாய் தாய்முன் நன்றாய் வாழும் மகள்போலே!
பிடித்தாய் கையில் பிள்ளை தொடர்ந்தாய் பின்னாலே!

முரடன் கையில் சிக்கி முகமும் சிதைந்தாயே!
திருடன் கையில் சிக்கிச் செல்வம் இழந்தாயே!
குருடன் என்னால் கோல முற்றும் அழிந்தாயே!
புருடன் இருந்தால் போதும் என்றே புகன்றாயே!

மூஞ்சி யைப்பார் முகரை யைப்பார் என்றேனே!
காஞ்ச மாடு போல இரவில் பாய்ந்தேனே!
மேஞ்ச பிறகு மிதித்துத் தள்ளி விட்டேனே!
தேஞ்ச குரலில் தேம்பக் கண்டும் ஒட்டேனே!

சோறு குழம்பை முகத்தில் வீசி எறிந்தேனே!
தாறு மாறாய்ப் பொருட்கள் கிடந்தால் இரைந்தேனே!
நாறும் வரைக்கும் உன்வீட் டாரைப் பழித்தேனே!
வீறிட் தழுத பிள்ளை களையும் வெளுத்தேனே!

கணக்குப் போட்டுச் சம்ப ளத்தைக் கேட்டேனே!
மனைக்கு வேண்டும் பொருட்கள் வாங்கிப் போட்டேனா?
உனக்குச் சேலை ஒன்று வாங்கிக் கொடுத்தேனா?
எனக்குப் பன்னீர் அத்தர் பூச மறந்தேனா?

படிக்கும் பிள்ளை நடுக்கம் போக்கிச் சிரித்தேனா? - ( நீ)
வடிக்கும் ரத்தக் கண்ணீர் கண்டு துடித்தேனா? - (உன்னை)
அடிக்கக் கூட செய்தே னேநான் படுபாவி! - (நீ)
தடுக்கக் கூட இல்லை யேடி அப்பாவி!

இன்னோர் பெண்தான் உன்-இடத்தில் இருந்தாலே
இந்நே ரத்தில் என்க தைதான் இருக்காதே!
என்ன நினைத்தே என்னைத் தாங்கிக் கொண்டாயோ?
முன்னை வாங்கி வந்த வரமாய்க் கண்டாயோ?

பிள்ளைக் காகப் பேடி என்னைப் பொறுத்தாயோ?
தள்ளா வயதுப் பெற்றோர் எண்ணித் தவித்தாயோ?
கொள்ளும் தாலி நிலைக்க வேண்டிக் குமைந்தாயோ?
பொல்லா இறைவன் மீதே பாரம் போட்டாயோ?

பூப்போல் போற்றிப் பொன்போல் காக்க மறந்தேனே!
ஈப்போல் பிடித்துத் தீப்போல் எரித்துக் கொன்றேனே!
தீர்ப்பின் முடிவில் என்ன வருமோ தெரியேனே!
ஆப்பு வைக்கப் பிள்ளை வருமோ அறியேனே! 9840382003

13 பாவ மன்னிப்பு - தந்தையிடம்


மூலப் பொருளே! முதலாம் பொருளே முழுப்பொருளே!
கால மெல்லாம் கதற வைத்த கருப்பொருளே!
கோல முற்றும் குலைந்து நைந்த குலப்பொருளே!
வேலன் விதித்த விதியால் விளைந்த வினைப்பொருளே!

எந்தாய் எதனைத் தந்தாய் எனினும் எனைத்தந்தாய்!
பந்தாய் உலகம் உதைத்து மகிழ உருத்தந்தாய்!
நொந்தே வாழ்வில் நொறுங்கி மடிய உயிர்தந்தாய்!
சிந்தை கலங்கிச் செயல்கள் குழம்ப மனம்தந்தாய்!

அழைக்க மட்டும் அழகாய்ப் பேரை வைத்தாயே!
பிழைக்கும் வழியைப் பிறகு காட்டிச் சென்றாயா?
உழைக்க உடலும் படிக்க வாய்ப்பும் தந்தாயா?
பழிக்கும் பாவச் செயற்கும் ஆளாய் வந்தாயா?

பிறந்த முதலே உன்னை எனக்குப் பிடிக்காதே!
சிறந்த தொழிலும் நொடித்துப் போச்சாம் என்னாலே!
திறந்த கதவு மூடிக் கொண்டால் என்செய்வேன்?
அறுந்து தொங்கும் விரல்போல் ஆனேன் யார்நோவேன்?

பறந்த எனது சிறகைப் பிடுங்கிப் பழிதீர்த்தாய்!
கறந்த பாலும் கசக்கும் வாழ்வை முன்வைத்தாய்!
மறந்தும் என்னை மகனென் றழைக்க மனமொப்பாய்!
திறந்த உலகில் தெருவில் அலைய எனைவிட்டாய்!

அதிர்ஷ்டம் கெட்ட நாயே என்றே அறைந்தாயே!
எதிரில் வராதே என்றே தினமும் இரைந்தாயே!
புதரில் ஒளியும் முயலாய் வீட்டில் வளர்ந்தேனே!
அதுவும் பொறாமல் மிதித்தாய் வெளியில் விழுந்தேனே!

மண்டி போட வகுப்பில் தினமும் வைத்தாய்நீ!
குண்டி தெரிந்த பிறகே சட்டை தைத்தாய்நீ!
உண்டி ராத உணவே எனக்குச் சோறாகும்!
கண்டி ராத உறவே தந்தை யாராகும்!

குற்றம் சாட்டிக் குற்றம் சாட்டி வளர்த்தாயே!
பற்றி எரிந்த உணர்வில் பாதிச் செத்தேனே!
மற்றோர் கண்ணைப் பார்த்துப் பேசப் பயந்தேனே!
கற்றோர் முன்னால் கூனிக் குறுகிக் குமைந்தேனே!

மட்டம் தாடி மட்டம் தட்டி வளர்த்தாயே!
கட்டித் தங்கம் கருங்கல் ஜல்லி ஆனானே!
ஒட்டோ உறவோ அற்றுத் தனித்துப் போனேனே!
முட்டி மோதி முயன்றும் வெற்றி காணேனே!

தந்தை இல்லை மகனும் இல்லை என்றாயே!
எந்த வழியும் தோன்றா துலகில் நைந்தேனே!
கந்தல் கந்தல் ஆன வாழ்வைக் கண்டேனே!
முந்திச் செய்த பாவம் என்ன நொந்தேனே!

அன்று மனித னாக வந்து வதம்செய்தாய்!
இன்று இறைவ னாகி விட்டாய் இதம்செய்வாய்!
சென்ற கதைகள் மறந்து நின்னைத் துதிக்கின்றேன்!
மன்றில் என்னை மன்ன னாக்க அழைக்கின்றேன்! 9840382003

14 பாவ மன்னிப்பு - இறைவனிடம்

பெற்றோர் மூலம் பெற்ற பீடை ஒருகோடி!
உற்றார் உறவோர் ஒதுக்கி வைத்த ஒருகேடி!
கற்றோர் கண்ணில் இன்னும் படாத கடைக்கோடி!
வற்றா நதிபோல் வடிக்கும் கண்ணீர் எதற்கோடி?

வாழ்வே என்றன் வீட்டுப் பக்கம் வாராயோ?
நோவே என்னை நோகச் செய்தல் போதாதோ?
சாவே நீதான் தள்ளிப் போகக் கூடாதோ?
தேவே கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஆகாதோ?

அழுகை தவிர அழகு நெஞ்சில் அறியேனே!
விழுகை தவிர வெற்றி கண்ணில் தெரியேனே!
கழுதை போலக் கவலை சுமந்தே இளைக்கின்றேன்!
பழுதை நீக்கப் பரமா உன்னை அழைக்கின்றேன்!

கழுதை என்முன் காரட் கட்டி விட்டாயே!
புழுதி பறக்கப் பறக்க ஓடி ஓய்ந்தேனே!
விழுந்து சிரித்தாய் விளையாட் டிதுவோ பெருமாளே?
எழுந்து சிரிக்க வைப்பாய் என்றோ திருநாளே?

வாயால் செய்த பாவம் ஒன்றோ இரண்டல்ல!
கையால் செய்த பாவம் சொல்லும் தரமல்ல!
பையில் பணமும் மெய்யில் அழகும் இழந்தேனே!
நோயில் நொந்து பாயில் வந்து விழுந்தேனே!

ஐயோ இறைவா இன்னும் என்னைக் கொல்லாதே!
கையால் கழுத்தைப் பிடித்து நரகில் தள்ளாதே!
மெய்யாய் இனிஇவ் வுடம்பு எதையும் தாங்காதே!
செய்வாய் கருணை பெய்வாய் அருளை நீங்காதே!

சரியாய்க் குணங்கள் அமையாக் குற்றம் தவிக்கின்றேன்!
பெரிதாய் எதையும் சாதிக் காமல் பிழைக்கின்றேன்!
அரிதாய் நடக்கும் அதிச யம்போல் வாராயோ?
விரைவாய் என்னை மாற்றி மேன்மை தாராயோ?

அச்சப் பட்டும் வெட்கங் கெட்டும் அழிந்தேனே!
எச்சில் இலையில் மிச்சப் பட்டே விழுந்தேனே!
உச்சந் தொட்டு மச்சம் பெற்றே வாழ்வேனோ?
உச்சுக் கொட்டப் பச்சக் கென்று வீழ்வேனோ?

நீயும் என்னைக் கைவிட் டால்நான் என்செய்வேன்?
நாயும் துரத்தும் நலிந்த வாழ்க்கை வாழ்கின்றேன்!
காயம் பட்ட மனதால் உன்னைத் துதிக்கின்றேன்!
மாயம் செய்ய வாடா கண்ணா அழைக்கின்றேன்!

தூங்கி எழுந்தால் துயரம் நீங்கும் வரம்வேண்டும்!
தாங்கிப் பணிந்தால் தலைகீழ் மாற்றம் வரவேண்டும்!
வீங்கி யழுத கண்ணில் வெற்றி படவேண்டும்!
ஏங்கித் தவிக்கும் நெஞ்சை இறைநீ தொடவேண்டும்! 9840382003

15 அவள் மலர்ந்தாள்


பாவாடை சட்டையுடன்
பாடித் திரிந்தமயில்
தாவாணி சேலையுடன் நின்றாள்! - அவள்
தலைகுனிந்து நாணத்துடன் சென்றாள்!

தாவுகின்ற பம்பரம்போல்
தடதடென நடந்தஅவள்
போவதே தெரியாமல் போனாள்! - மெல்லப்
பூபோலக் கால்வைக்க லானாள்!

ஓங்கிவிழும் அருவியென
ஓசையுடன் பேசியவள்
தேங்கிநிற்கும் மௌனநதி யானாள்! - அவள்
சிரிப்பினிலும் அமைதியுரு வானாள்!

அலைபோலப் பார்வைகளை
அங்குமிங்கும் வீசியவள்
சிலைபோல நிலம்நோக்கு கின்றாள்! - ஏனோ
சிலபோது எனைநோக்கு கின்றாள்!

அப்படியே விரித்ததலை
ஆடையுடன் திரிந்தவள்தான்
ஒப்பனையில் மிகக்கவனம் கொண்டாள்! - அவள்
ஒயிலான தேர்போல வந்தாள்!

தம்பியுடன் தங்கையுடன்
சண்டையிட்டுத் திரிந்தவள்தான்
வம்பிழுக்கும் வேலையெல்லாம் விட்டாள்! - தன
மனதினில்ஓர் அந்தஸ்துப் பெற்றாள்!

தாய்சொன்ன வேலையெல்லாம்
தட்டிக் கழித்தவள்தான்
வாய்சொல்லி மூடுமுன்னே முடித்தாள்! - அவள்
வாழ்க்கையின் ஆரம்பம் படித்தாள்!

பாடத்தை மட்டுமே
பகலிரவாய்ப் படித்தஅவள்
கூடவே கதைநாவல் படித்தாள்! - தாய்
கூப்பிடச் சலிப்போடு முடித்தாள்!

முழுக்கண்ணால் எனைநோக்கி
முகம்மலரச் சிரித்தஅவள்
அரைக்கண்ணை இன்றுமறைக் கின்றாள்! - ஏனோ
மனக்கண்ணால் கண்டுரசிக் கின்றாள்!

எதிலுமொரு பரபரப்பு
வேகமென இருந்தவள்தான்
எதிலுமொரு மேன்மையைக் கொண்டாள்! - அவள்
எழிலான பெண்மையைக் கண்டாள்! 9840382003

16 புதிய தலைமுறைப் பெண்கள்

புதிய தலைமுறைப் பெண்கள்! - ஆண்
போக்கிரி களுக்குஎ மன்கள்!

அழகைக் கண்டு ஆசை கொண்ட காலம் போயாச்சே! - அவள்
அறிவைக் கண்டு அச்சம் கொள்ளும் காலம் வந்தாச்சே!

வெட்கம் கண்டு விரட்டிச் சென்ற காலம் போயாச்சே! - அவள்
வீரம் கண்டு வேர்த்துப் போகும் காலம் வந்தாச்சே!

மௌனம் கண்டு மடக்கப் பார்த்த காலம் போயாச்சே! - அவள்
பேச்சைக் கண்டு பிரமிக் கின்ற காலம் வந்தாச்சே!

அடக்கம் கண்டு அதட்டப் பார்த்த காலம் போயாச்சே! - அவள்
ஆற்றல் கண்டு அதிர்ந்து போகும் காலம் வந்தாச்சே!

பொறுமை கண்டு புண்ணாய்ச் செய்த காலம் போயாச்சே! - அவள்
திறமை கண்டு திகைத்து நிற்கும் காலம் வந்தாச்சே!

பணிவைக் கண்டு பந்தாய் எற்றும் காலம் போயாச்சே! - அவள்
துணிவைக் கண்டு துக்கம் கொள்ளும் காலம் வந்தாச்சே!

மென்மை கண்டு மேயப் பார்த்த காலம் போயாச்சே! - அவள்
வன்மை கண்டு வாலைச் சுருட்டும் காலம் வந்தாச்சே!

என்ன செய்வாள் என்றே மிதித்த காலம் போயாச்சே! - அவள்
எதையும் செய்வாள் ஏன்வம் பென்னும் காலம் வந்தாச்சே!

பார்த்தால் சிரித்தால் படிவாள் என்று பல்லைக் காட்டாதே! - அவள்
பார்வை வேறு பாதை வேறு பாழாய்ப் போகாதே! 9840382003

17 வாங்காதே வாங்காதே இலஞ்சம் வாங்காதே

வயிறெரிந்து கொடுப்பான்; இலஞ்சம் வாங்காதே!
மனம்நொந்து சபிப்பான்; இலஞ்சம் வாங்காதே!
மயிர்போல மதிப்பான்; இலஞ்சம் வாங்காதே!
மாதாவைப் பழிப்பான்; இலஞ்சம் வாங்காதே!

காட்டிக் கொடுத்திடுவான்; இலஞ்சம் வாங்காதே!
கைதி யாக்கிடுவான்; இலஞ்சம் வாங்காதே!
வீட்டுக் கவமானம்; இலஞ்சம் வாங்காதே!
வீதி கைகொட்டும்; இலஞ்சம் வாங்காதே!

தானாகக் கொடுத்தாலும் இலஞ்சம் வாங்காதே!
தவறுசெய்யத் தூண்டுவான்; இலஞ்சம் வாங்காதே!
வீணாக மாட்டிடுவாய்; இலஞ்சம் வாங்காதே!
வேலைமீண்டும் கிடைக்குமா? இலஞ்சம் வாங்காதே!

எல்லாரும் வாங்கினாலும் இலஞ்சம் வாங்காதே!
ஏன்உனக்கு அறிவில்லை? இலஞ்சம் வாங்காதே!
நல்லாரும் இல்லையோ? இலஞ்சம் வாங்காதே!
ஞாயம் தெரியாதா? இலஞ்சம் வாங்காதே!

பெண்டாட்டி விரும்பினாலும் இலஞ்சம் வாங்காதே!
பிள்ளைகள் விரும்பமாட்டார்; இலஞ்சம் வாங்காதே!
உண்டாக்கி வளர்த்தவளும் இலஞ்சம் வாங்காதே!
உள்ளுக்குள் பயப்படுவாள்; இலஞ்சம் வாங்காதே!

வரவுக்குள் வாழ்ந்துவிடு; இலஞ்சம வாங்காதே!
வறுமையைத் தாங்கிவிடு; இலஞ்சம் வாங்காதே!
பொறுப்புவரும் பிள்ளைக்கு; இலஞ்சம் வாங்காதே!
பொற்காலம் பிற்காலம்; இலஞ்சம் வாங்காதே!

இன்னும் தேவையென்றால் இலஞ்சம் வாங்காதே!
இல்லத்தில் சிறுதொழில்செய்; இலஞ்சம் வாங்காதே!
உன்னை உயர்த்திக்கொள்; இலஞ்சம் வாங்காதே!
உயர்வேலை பார்த்துச்செல்; இலஞ்சம் வாங்காதே!

அதிகாரம் இருக்குதென்று இலஞ்சம் வாங்காதே!
அநியாய மாய்க்கசக்கி இலஞ்சம் வாங்காதே!
சதிகாரன் வசமாவாய்; இலஞ்சம் வாங்காதே!
சமுதாயம் பாழாகும்; இலஞ்சம் வாங்காதே!

பெண்டாட்டி சீக்காவாள்; இலஞ்சம் வாங்காதே!
பிள்ளைகள் மக்காகும்; இலஞ்சம் வாங்காதே!
ரெண்டாகச் செலவுவரும்; இலஞ்சம் வாங்காதே!
லேட்டாகப் புத்திவரும்; இலஞ்சம் வாங்காதே!

எட்டுமாடி கட்டியென்ன? இலஞ்சம் வாங்காதே!
எல்லாமும் மண்ணாகும்; இலஞ்சம் வாங்காதே!
பட்டுவேட்டி கட்டியென்ன? இலஞ்சம் வாங்காதே!
படக்கென்று நழுவிவிழும் ; இலஞ்சம் வாங்காதே!

பட்டாளச் சிப்பாய்கள் இலஞ்சம் வாங்கியே
பகைவனை உள்விட்டால் என்ன செய்குவாய்?
முட்டாளே யோசித்து இலஞ்சம் வாங்காதே!
முதுகெலும்பாய் இருப்பவனே இலஞ்சம் வாங்காதே!

விவசாயப் பெருமக்கள் இலஞ்சம் வாங்கியே
விசத்தை விதைத்துவிட்டால் என்ன செய்குவாய்?
அவிசாரி மகனேநீ இலஞ்சம் வாங்காதே!
அரிவாளைத் தூக்கவா? இலஞ்சம் வாங்காதே! 9840382003

18 இலஞ்சம் கொடுத்துப் பழக்காதே

இலஞ்சம் கொடுத்துப் பழக்காதே! - நீ
நல்ல வனையும் கெடுக்காதே!

ஒருவன் கொடுத்துப் பழக்கிவிட்டால் - அவன்
ஒவ்வோ ரிடமும் எதிர்பார்ப்பான்! - பின்
ஒழுங்காய் வேலை செயமாட்டான்! - பதில்
உரைக்கக் கூட பணம்கேட்பான்!

கொடுக்கா தவனை அவமதிப்பான்!
கோபம் கொண்டு அலைக்கழிப்பான்!
கொடுத்துத் தொலைவோம் எனும்நிலைக்குக்
கொண்டு வந்து பல்லிளிப்பான்!

பணத்தின் ருசியைக் காட்டிவிட்டால் - அது
பைத்தியம் பிடித்து அலையவைக்கும்!
குணத்தில் சாது வானவனும்
குண்டர் போல நடக்கவைக்கும்!

உரிமம் தருகிறேன் கொடுஎன்பான்!
உண்மை மறைக்கிறேன் கொடுஎன்பான்!
தருகிறேன் வேலை கொடுஎன்பான்!
தவறைச் செய்துகொள் கொடுஎன்பான்!

காட்டில் மரங்கள் வெட்டப்படும்!
ஆற்றில் மணலும் அள்ளப்படும்!
நாட்டின் வளங்கள் சுரண்டப்படும்!
நன்னீர் சோற்றுக்குப் பஞ்சம்வரும்!

சாலையில் தார்போய் கல்லிருக்கும்!
கூரையில் கம்பி பல்லிளிக்கும்!
வெள்ளம் சூழ்ந்தால் வடியாது!
வேதனை வந்தால் விடியாது!

அரசின் வருவாய் சுருங்கிவிடும்!
அயலார் கடனும் பெருகிவிடும்!
பெரிய திட்டம் பணமின்றிப்
பேச்சள வோடு நின்றுவிடும்!

சமூக விரோதச் செயல்பெருகும்!
சட்டவிரோதப் பணம்பெருகும்!
தேசத் துரோகம் குழிபறிக்கும்!
தெய்வக் குற்றம் வழிமறிக்கும்!

பாடு பட்டவன் மனம்நோவான்!
பங்கு கேட்டவன் தினம்வாழ்வான்!
கேடு கெட்டவன் அரசாள்வான்!
கேள்வி கேடடவன் தரைவீழ்வான்!

நீதி நேர்மை பார்க்காது! - லஞ்சம்
நெஞ்சில் இரக்கம் காட்டாது!
போதும் என்று நிறுத்தாது! - கை
புத்த னிடமும் மடங்காது!

நாட்டைப் பற்றி நினைக்காது!
நன்றி என்பதும் இருக்காது!
போட்டி போட்டுப் பொன்குவிக்கும்!
புதைத்து வைத்துப் பேய்சிரிக்கும்! 9840382003

19 எனது பெற்றோர்

வேண்டி வேண்டித் தவங்கிடந்து
விரும்பி என்னைப் பெற்றார்கள்! - நான்
மோண்டு பேண்டு கிடந்தாலும்
முகம்சுளிக் காமல் எடுத்தார்கள்!

பொன்னே போல மதித்தார்கள்!
பூவே போலச் சுமந்தார்கள்!
கண்ணே போலக் காத்தார்கள்!
கருத்தாய் என்னை வளர்த்தார்கள்!

ஈயோ எறும்போ அணுகாமல்
என்அரு கேயே இருந்தார்கள்! - நான்
வாயால் வாந்தி எடுத்ததையும்
வாங்கிக் கையில் கொண்டார்கள்!

எனது தூக்கம் தொடர்வதற்குத்
தனது தூக்கம் தொலைத்தார்கள்! - நான்
கனவு கண்டே இதழ்விரிக்கக் - அக்
காட்சி கண்டே இரசித்தார்கள்!

இட்டிலி தோசை எனக்களித்து
இரவு மீந்ததை உண்டார்கள்!
பட்டும் பவிசும் எனக்களித்துப்
பழையதைத் தைத்து அணிந்தார்கள்!

கட்டில் மெத்தையில் நான்படுக்கக்
கல்தரை மீது படுத்தார்கள்!
கொட்டி எனக்குக் கொடுத்துவிட்டுக்
குறைவில் லாமல் சிரித்தார்கள்!

உடம்பிற் கொன்று வந்துவிட்டால்
உயிர்போ னதுபோல் துடித்தார்கள்!
கடும்விர தத்தை மேற்கொண்டு
கடவுளை வேண்டிக் கொண்டார்கள்!

கல்வி கற்று நானுயரக்
கடுமை யாக உழைத்தார்கள்!
பல்வி தத்தும் பாடுபட்டுப்
பணத்தை எனக்குச் சேர்த்தார்கள்!

செய்த எனது தவறெல்லாம்
சிரித்துப் பொறுத்துக் கொண்டார்கள்!
வைய வாழ்வில் நான்சிறக்க
வகையாய்த் தர்மம் செய்தார்கள்!

வாழ்வின் எல்லா மட்டத்திலும் - என்
வளர்ச்சி கண்டு மகிழ்ந்தார்கள்!
பாழ்வி னையால் திருமணத்தைப்
பார்க்கு முன்பே மறைந்தார்கள்! 9840382003

20 வா முருகா வா


வா! முருகா வா! - எ ன்
மகள் வயிற்றில் வா!

குழந்தை யாக வா! - எங்கள்
குறைகள் தீர வா!
அழக னாக வா! - எங்கள்
ஆசை தீர வா!

வீடு நிறைய வா! - மகிழ்ச்சி
வெள்ளம் பரவ வா!
ஆடிப் பாட வா! - எங்கள்
அதிசயமே வா!

மழலை பேசி வா! - எங்கள்
மடியில் ஏற வா!
ஒழுகும் எச்சி லால் - எங்கள்
உள்ளம் கழுவ வா!

கழுத்தைக் கட்டிக் கொள்! - என்
கர்மம் தொலையு மே!
நெஞ்சில் மிதித்து நில்! - என்
நீசம் மறையு மே!

முகத்தில் சிறு நீர் - பெய்!
மோட்சம் கிடைக்கு மே!
மடியில் சந்த னம் - அரை!
மனது குளிரு மே!

கண்ணை நோண்டிப் பார்! - என்
கவிதை விரியு மே!
வாயைக் கிண்டிப் பார்! - என்
வார்த்தை பலிக்கு மே!

ஓட்டுப் புல்லைப் போல் - மார்பில்
ஒட்டிக் கொள்ள டா!
கட்டித் தங்க மே! - என்
கடவுள் நீய டா!

தோளில் தூங்க வா! - என்
தொடையில் ஏற வா!
கேள்வி கேட்க வா! - என்னைக்
கேலி செய்ய வா!

மீசை திருக்க வா! - என்
மேனி நக்க வா!
காசை எடுக்க வா! -ஊஞ்சல்
காலில் ஆட வா!

ஆனை ஏற வா! - என்னை
ஆட்டிப் படைக்க வா!
கூனல் நிமிர்த்த வா! - நானும்
குழந்தை யாக வா!

கதைகள் கேட்க வா! - என்
காலைக் கட்ட வா!
முதுகில் மிதிக்க வா! - என்
மூச்சை நிறுத்த வா!

தாம திக்கா தே! - செய்த
தவறும் ஏத டா?
சாக டிக்கா தே! - கொஞ்சம்
தயவு செய்ய டா! 9840382003

21 நான் ஆணாதிக்க வாதியா


கழுதை பன்றி என்பேன் - நான்
ஆணாதிக்க வாதியா?
கையை நீட்டி அடிப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?
அழுதால் விடவும் மாட்டேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?
அடைந்தே தீர்வேன் நோக்கம்; - நான்
ஆணாதிக்க வாதியா?

குப்பை கிடந்தால் குதிப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?
குழந்தை அழுதால் மிதிப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?
உப்பாய் இருந்தால் உதைப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?
ஒழுங்காய் இருக்க விதிப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?

பணிக்குச் சென்ற பிறகு - நான்
ஆணாதிக்க வாதியா?
பாத்தி ரங்கள் தேய்ப்பான்; - நான்
ஆணாதிக்க வாதியா?
துணிக்குச் சோப்புப் போட்டு - நான்
ஆணாதிக்க வாதியா?
துவைத்து மடித்து வைப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?

கக்கூ செல்லாம் கழுவி - நான்
ஆணாதிக்க வாதியா?
கமக மக்கச் செய்வேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?
பக்கெட் வாளி நிரப்பி - நான்
ஆணாதிக்க வாதியா?
பாலைக் காய்ச்சி வைப்பேன்; - நான்
ஆணாதிக்க வாதியா?

அவட்கு நூறு சேலை! - நான்
ஆணாதிக்க வாதியா?
எனக்கு நாலே வேட்டி! - நான்
ஆணாதிக்க வாதியா?
அவட்கு வைரம் ஜொலிக்கும்! - நான்
ஆணாதிக்க வாதியா?
எனக்குக் கையைக் கடிக்கும்! - நான்
ஆணாதிக்க வாதியா?

சொத்தெல் லாம்அவள்பேரில்! - நான்
ஆணாதிக்க வாதியா?
சுமையெல் லாம்என் தோளில்! - நான்
ஆணாதிக்க வாதியா?
அத்தை பெற்ற மகளே! - நான்
ஆணாதிக்க வாதியா?
அறிவாய்! அறிவாய்! அறிவாய்! - நான்
ஆணாதிக்க வாதியா? 9840382003

22 கறுப்புப் பெண்ணே


கறுப்புப் பெண்ணே! கறுப்புப் பெண்ணே!
கவலை ஏனம்மா?- உன்
உறுப்பில் ஒன்றும் ஊனம் இல்லை;
உண்டு மகிழம்மா!

பெண்என் றாலே இகழும் நாட்டில்
பிறந்து விட்டாயே! - நீ
கண்ணில் இன்னும் கறுப்பாய்த் தோன்றி
கசந்து விட்டாயே!

கறுப்பென் றதுமே வீட்டில் உன்னைக்
கழற்றி விட்டார்கள்!
பொறுப்பில் லாத பெற்றோர் உன்னைப்
பொசுக்கி விட்டார்கள்!

அன்னை கூட வைதாள் என்றால்
அதுவும் வறுமையால்! - உனக்குப்
பொன்னை அதிகம் போட வேண்டும்
என்ற வழமையால்!

சிறாரும் உன்னைக் கேலி செய்து
சிறகொ டித்தார்கள்!
பொறாமல் நீயும் ஒதுங்கி வாழ்வில்
பொரும விட்டார்கள்!

பெட்குப் பெண்ணே எதிரி என்ற
பேச்சி ருந்தாலும்
வெட்கங் கெட்ட ஆண்கள் தாமும்
வெதும்பச் செய்கின்றார்!

தானே கறுப்பு தங்கை கறுப்பு
தாய்கறுப் பென்றாலும்
தனக்கு வேண்டும் மனைவி மட்டும்
நிறமாய்க் கேட்கின்றார்!

கறுப்புப் பெண்கள் ஆக்கும் சோறு
கசப்பாய் இருக்குமா?
கறுப்புப் பெண்கள் இருக்கும் வீடு
இருட்டாய் இருக்குமா?

கறுப்புப் பெண்கள் சூலா காரா?
பாலசு ரக்காதா?
குறிப்பு ணர்ந்து வரவ றிந்து
குடும்பம் நடத்தாரா?

நிறத்துப் பெண்டிர் கறுப்பாய்ப் பெற்றால்
எங்கே முகம்வைப்பீர்?
நிறத்துப் பெண்டிர் செருக்காய்த் திரிந்தால்
எங்கே கரம்வைப்பீர்?

கறுப்புப் பெண்கள் கவலை ஏக்கம்
கடவுள் அறிவானோ?
கணவன் வரும்வரை கலங்கும் கலக்கம்
கண்டே அதிர்வானோ? 9840382003

23 ஒரே காதல்

சின்னஞ் சிறுபாவை; தின்னும் விழிப்பார்வை;
இன்னும் மலராதாள்; இன்றோ, நாளையோ?
அன்னை அறியாமல் யார்க்கும் தெரியாமல்
என்னை நினைக்கின்றாள்; எனக்குத் தெரியாதோ?

தோழன் வீட்டிற்குத் துணையாய்ப் போகையில்,
ஆழ நேசிக்கும் அழகுப் பூம்பாவை
தாழப் பார்க்கின்ற தணியா ஒருபார்வை
சூழ என்நெஞ்சில் சொந்தம் கேட்குமே!

வேலை இல்லாமல் வெளியில் நிற்கின்றாள்;
ஆளைப் பார்த்திட்டால் அமுதம் குடிக்கின்றாள்;
சாலை குறுக்காகத் தாவிக் கடக்கின்றாள்;
பாலு எனக்கூவிப் பைய(ன்) அழைக்கின்றாள்!

எந்தன் பார்வைக்கே ஏங்கித் தவிக்கின்றாள்;
எந்தன் வார்த்தைக்கே எதையும் செய்கின்றாள்;
வந்த பருவத்தைத் தாங்க முடியாமல்
சொந்தம் சூழ்நிலை எல்லாம் மறக்கின்றாள்!

குழந்தை என்பேனா; குமரி என்பேனா;
வழங்கும் அவள்காதல் வாங்கிக் கொள்வேனா;
அழுந்தும் மனசாட்சிக் காமாம் என்பேனா;
இழந்த என்நெஞ்சை என்தான் செய்வேனோ? 9840382003

24 ஐசக், காந்தி, அடுத்தது நீ

மரத்தில் இருந்து பழங்கள் விழுவதை
மனிதர் பலர்பார்த்தார்!
கீழே ஏன்அவை விழணும் என்ற
கேள்வியை யார்கேட்டார்?

அரிச்சந் திரனின் நாடகத் தையும்
அநேகம் பேர்பார்த்தார்!
உண்மையே அவர்போல் பேசணும் என்ற
உறுதியை யார்கொண்டார்?

ஊமைப் படத்தைப் பார்ப்பது போல
உலகைப் பார்க்காதே! - அதன்
உள்ளே உறைவது என்ன என்பதை
உணர மறுக்காதே!

கண்ணைத் துடைத்துக் காட்சியைக் கண்டால்
காண்பது புதிதாகும்! - நீ
உன்னைத் துளைத்துக் கேள்விகள் கேட்டால்
உண்மை புலனாகும்!

தேடும் வேட்கை தகிக்கும் நெஞ்சைத்
தேடி ஞானம்வரும்! - நீ
ஓடும் மனதை ஒருநிலைப் படுத்து;
உனக்குள் ஆற்றல்வரும்!

உற்றுப் பார்!மனம் ஒன்றிப் பார்!அதன்
சுற்றும் முற்றும்பார்!
கற்றுப் பார்!பதில் பெற்றுப் பார்!புதுக்
கேள்விகள் கேட்டுப்பார்!

தீப்பொறி போல ஒருபொறி உனது
சிந்தையில் உருவாகும்! - அது
யாரென உன்னை உலகிற்குக் காட்டும்;
யாவும் வசமாகும்! 9840382003

25 கொக்கோ கோலா

கொக்கோ கோலா நிறுவனத் தலைவன்
கொடுத்தான் ஒருபேட்டி!
'சிக்கிக் கொண்டது இந்தியா! இனிமேல்
செழிக்கும் வியாபாரம்!

கனவுக் கண்ணன் கனவுக் கன்னியைக்
காசால் அடியுங்கள்!
தினமும் அவர்கள் நடிக்கும் விளம்பரம்
திரையில் காட்டுங்கள்!

எண்ணி இரண்டே ஆண்டில் இந்திய
இளைஞர் பட்டாளம்
தண்ணீர்க் குப்பதில் கோலா குடிக்கும்
சரித்திரம் காணுங்கள்!'

அந்நியன் எப்படி அழகாய் நம்மை
அளக்கிறான் பாருங்கள்!
சொன்னதன் படியே நடந்ததா இல்லையா
சூழ்ச்சியும் காணுங்கள்!

பதநீர் இளநீர் பசுமோர் புளிநீர்
பருகிய வழிவந்தோர்
புதுநீர் கோலா குடித்துக் களிக்கிறார்
புதுமை எனும்பேரில்!

படித்ததைக் கேட்டால் எம்.ஈ., பி.ஈ.,
என்று சொல்வார்கள்!
குடிப்பதைப் பார்த்தால் உணவுடன் கோலா!
கொடுமைஎங் கேசொல்ல?

பல்லைக் கோலா பாட்டிலில் போட்டால்
பத்தே நாளைக்குள்
பல்லிருக் காது கரைந்தே போகும்
பாழும் திரவமடா!

கக்கூஸ் கோப்பையில் கோலா ஊற்றினால்
கறைகள் பறந்தோடும்!
இக்கோ லாவை உள்ளே ஊற்றினால்
இரைப்பை என்னாகும்?

இதைத்தான் இங்கே இளமைச் சின்னமாய்
ஏந்திப் பிடிக்கின்றார்!
அதைத்தா னேஅவன் இங்கெதிர் பார்த்தான்?
................................................................... 9840382003

26 ஒரு குறுங் குறுங் காவியம் நகைச்சுவை

சுருட்டை நாயனார் ஓட்டப் புராணம்!
******************************************************

சேமிப்புப் படலம்:
*************************
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேமித்தார்!
மாதக் கணக்கில் வருடக் கணக்கில் சேமித்தார்!
சேய்கள் வாழ்க்கை சிறந்து விளங்கச் சேமித்தார்!
சேமித் துப்பின் மீதி யைத்தான் செலவிட்டார்!

பட்டே வேண்டாம் பருத்தி போதும் என்றாரே!
பஸ்ஸே வேண்டாம் நடையே போதும் என்றாரே!
கட்டில் வேண்டாம் தரையே போதும் என்றாரே!
கசாயம் போதும் டாக்டர் வேண்டாம் என்றாரே!

விளம்பரப் படலம்;
****************************
ஒலிபெ ருக்கி விளம்ப ரந்தான் செய்தானே!
ஒவ்வோர் வீடாய் நோட்டீஸ் போட்டும் வந்தானே!
தலைவ லிக்கும் அளவு கத்தி வந்தானே!
தாய்மார் தங்கள் கவனம் கவர்ந்து கொண்டானே!

'அதிக வட்டி அன்பி னாலே தருகின்றேன்!
ஆண்டி ரண்டில் அசலை இரண்டாய்த் தருகின்றேன்!
புதிய திட்டம் ஓடி வந்து சேருங்கள்!
போனால் வராது போனால் வராது சேருங்கள்!'

பணம் கட்டிய படலம்:
********************************
போட்டி போட்டு ஓடி வந்து கட்டினார்!
புருஷ னுக்கும் தெரியா மல்தான் கட்டினார்!
கூட்ட மாகக் குவிந்து வந்து கொட்டினார்!
குதூக லித்துக் கும்மி யடித்து முட்டினார்!

எம்.ஏ., பி.ஏ., படித்தோ ரெல்லாம் கட்டினார்!
இடாக்டர் வக்கீல் போலீ செல்லாம் கட்டினார்!
தும்மி னோரும் இருமி னோரும் கட்டினார்!
துண்டு போட்ட கரைவேட் டிகளும் கட்டினார்!

பணம் சேர்ந்த படலம்:
********************************
கோடி கோடி கோடி கோடிச் செல்வமே!
தேடித் தேடித் தேடித் தேடி வந்ததே!
ஓடி ஓடி ஓடி ஓடி வாங்கியே
பாடிப் பாடிப் பாடி வைத்தார் வீங்கியே!

எடுத்து வைக்க இடமில் லாமல்போனதே!
எண்ணி எண்ணி விரலில் எலும்பும் காணுதே!
படுக்கை கூட பணத்தின் மீதே ஆனதே!
பல்வி ளக்கப் பொடிம டிக்கப் போனதே!

மக்கள் கனவுகாண் படலம்:
*************************************
மாடி வீட்டைக் கனவில் கண்டு பாடினார்!
மகளக ழுத்தில் தாலி ஏற ஆடினார்!
ஓடிப் பஞ்சம் ஒழிந்த தென்று கூவினார்!
உடுத்திப் பட்டு மகிழ்வோ மென்று தாவினார்!

நாயனார் கனவுகாண் படலம்:
*******************************************
சிங்கப் பூரில் பாதி இடத்தை வாங்கலாம்!
சினிமா காரி கூட படுத்துத் தூங்கலாம்!
சிங்கக் கறியும் புலிப்பால் குடித்தும் வாங்கலாம்!
சிவனே என்று சிறையை விட்டு நீங்கலாம்!

ஓட்டப் படலம்:
**********************
பஞ்சாங் கத்தில் நல்ல நாளைத் தேடினார்!
பத்தி சூடம் சாம்பி ராணி ஏற்றினார்!
கொஞ்சங் கூட சந்தே கத்தை நீக்கினார்!
கும்மி ருட்டில் பூட்டிக் கம்பி நீட்டினார்!

ஐயோ ஐயோ ஐயோ என்றே அலறினார்!
அடிவ யிற்றில் அடித்துக் கொண்டு கதறினார்!
பொய்யாய்ப் போச்சே போச்சே என்று மறுகினார்!
பொத்பொத் தென்று தலையில் அடித்து உருகினார்!

போலீஸ் பிடித்த படலம்:
************************************
போலீ சுக்கும் கம்பெ னிக்கும் கூட்டிது!
போக்குக் காட்டி மோப்ப நாயும் பிடித்தது!
பாலீ சான பைனான் சியரும் சிக்கினார்!
பணத்தை வைத்த இடத்தை யெல்லாம் கக்கினார்!

பங்கு வைத்த படலம்:
********************************
பத்தி லொன்று போலீ சுக்குச் சென்றது!
பத்தி லொன்று நீதித் துறைக்குச் சென்றது!
பத்தி லொன்று அமைச்ச ருக்குச் சென்றது!
பத்தி லொன்று பத்தி ரிக்கை தின்றது!

பத்து நாளாய்ப் படத்தைப் போலக் காட்டினார்!
பரப ரப்பை விறுவி றுப்பை ஊட்டினார்!
பத்து நாளில் அடுத்த செய்தி மாற்றினார்!
பாவி மக்கள் தாமும் மறந்தே தேற்றினார்!

(வேறு)
மூட்டை யளவு போட்ட வர்க்கு முட்டை யளவு கிடைத்தது!
கோட்டை யளவு போட்ட வர்க்குக் கொட்டை யளவு கிடைத்தது!
பாட்டை எண்ணிப் பார்த்தோர்க் கெல்லாம் பட்டை நாமம் கிடைத்தது!
நோட்டை எண்ணி நாய னாரும் நுங்கு தின்று வாழ்கிறார்!

சுபம்! சுபம்! சுபம்! 9840382003

27 பிறந்த நேரம் சரியில்லை பெருமாளே


ஆராய்ச்சி மணிகட்டி அரசாண்ட மனுநீதி
அரசர்கள் காலத்தில் பிறந்தேனா?
அணைதந்த கரிகாலன் தலைதந்த குமணன்தன்
அறிஞர்கள் அவையில்தான் இருந்தேனா?

தேர்தந்த வள்ளல்கள் திறம்பாடிப் பரிசாகச்
சீருக்கோர் ஊர்பெற்று மகிழ்ந்தேனா?
சென்றிட்ட இடமெல்லாம் வென்றிட்ட சோழர்கள்
திறமிக்க படையில்வாள் பிடித்தேனா?

பார்போற்றும் சித்தர்கள் புலவர்கள் துறவோர்கள்
பக்கத்தில் பணிசெய்து பயின்றேனா?
பன்னாட்டு வணிகத்தில் அரபுக்கள் யவனர்க்குப்
பட்டோடு பவளங்கள் கொடுத்தேனா?

கூர்கெட்ட பொதுமக்கள் குணங்கெட்ட அரசாங்கம்
கொட்டந்தான் அடிக்கின்ற திருநாட்டில்
கொலைகொள்ளை பசிபஞ்சம் கொடும்லஞ்ச வூழல்கள்
குப்பைக்கு நடுவில்நான் பிறந்தேனே! 9840382003

28 உலகுன்னைப் பார்க்க வேண்டும்


ஏழையென்றும் இல்லைஎன்றும் சோர்ந்து விடாதே! - தம்பி,
இரக்கத்தில் வாழ்வதற்கு ஆசைப் படாதே!
இலவசத்தை நம்பிநம்பி ஏங்கி இராதே! - நீ
ஏமாந்துன் வாழ்க்கையை நழுவ விடாதே!

கல்வியும்ஓர் ஆடம்பரம் உனது வாழ்விலே! - தினம்
கவலையச்சம் போராட்டம் உனது வழியிலே!
கண்கலங்கும் பெற்றோர்க்கோ வளர்க்க முடியலே! - உனைக்
காப்பாற்றிக் கரைசேர்க்க வழியும் தெரியலே!

பிரச்னைகள் நடுவில்நீ வளர்ந்து வருகிறாய்! - எதிலும்
பின்தங்கி ஏமாறும் நிலையில் இருக்கிறாய்!
விழித்துக்கொள் இப்போதே வாழ்க்கை உணதடா! - கொஞ்சம்
விளையாட்டாய் இருந்தாலும் எல்லாம் கனவடா!

உனக்குநீயே தாய்தகப்பன் ஆகிக் கொள்ளடா! - இந்த
உலகைப்பார்த்து உன்னைநீயே வளர்த்துக் கொள்ளடா!
அறிஞர்களின் வரலாற்றில் பாடம் கொள்ளடா! - உன்
அடிமனதில் முன்னேற்றக் கருத்தை வையடா!

வறியவர்க்கே சோதனைகள் வாழ்வில் நிரம்ப! - அதை
வலுக்கொண்டு தாங்கிவிடு காலம் திரும்ப!
அடுத்தவரைப் போலநீயும் வாழ்வில் உயரலாம்! - சற்றும்
அலட்சியமாய் இருக்காதே மேலும் வளரலாம்!

பிறந்துவிட்ட சூழ்நிலையைக் காரணம் சொல்லி - நாட்டில்
பிழைக்கத்தெரி யாதிருப்பான் வம்சக் கொல்லி!
உனக்குக் கிடைத்த வாழ்வில் சலித்து விடாதே! - நாளை
உலகுன்னைப் பார்க்கவேண்டும் கெடுத்து விடாதே! 9840382003

29 வெளிச்சத்தில் நீ

படி! படி! - தம்பி,
படி! படி! - நீ
பலருக்கும் பயன்படப்
படி! படி!

முன்னேற வேண்டுமென்ற வெறியோடு - எதிலும்
முதலாக வேண்டுமென்ற குறியோடு
தன்னால் முடியுமென்ற துடிப்போடு - வரும்
தலைமுறை மாற்றுவதில் பிடிப்போடு ....

பெற்றவர்கள் கூலிஎன்ற உணர்வோடு - நீ
பிறந்தது கூரைஎன்ற நினைவோடு
மற்றவர்கள் கேலிபொருட் படுத்தாது - நீ
மனதுக்குள் உறுதியாய் நடைபோடு!

நன்னடத்தை உனக்கென்றும் பலமாகும்! - உன்
நம்பிக்கைதான் உனக்குற்ற துணையாகும்!
முன்னோடிகள் பலருண்டு வழிகாட்ட! - நீ
முன்னேறிச்செல் திறமையை நிலைநாட்ட!

பணம்காசு இல்லைஎன்று தயங்காதே! - மனம்
படைத்தவர் உதவுவார் கலங்காதே!
இனம்கண்டு உலகமும் பாராட்டும்! - உன்
எதிர்நீச்சல் வெற்றிக்குத் தேரோட்டும்!

மூளைஎன்ப தெல்லாருக்கும் ஒன்றேதான்! - அதை
முழுவதும் பயன்படுத் தின்றேதான்!
வேளைவர உழைத்திடு நன்றேதான்! - புகழ்
வெளிச்சத்தில் நீவருவாய் அன்றேதான்! 9840382003

30 பெண் பார்க்கப் போகிறேன்

நிறங்கம்மி என்றாலும் பரவா யில்லை!
நெட்டைதான் என்றாலும் பரவா யில்லை!
குறைவேறு இல்லையென்றால் பரவா யில்லை! - நான்
குடும்பந்தான் நடத்தப்போறேன் பரவா யில்லை!

படிப்பதிகம் என்றாலும் பரவா யில்லை!
பணமதிகம் என்றாலும் பரவா யில்லை!
பிடிச்சிருக்கு என்றுசொன்னால் பரவா யில்லை! - நான்
பேசாமல் மணந்திடுவேன் பரவா யில்லை!

ஆண்குரலாய் இருந்தாலும் பரவா யில்லை!
அரும்பி இருந்தாலும் பரவா யில்லை!
வேண்டும் குணமிருந்தால் பரவா யில்லை! - நான்
விரும்பி மணமுடிப்பேன் பரவா யில்லை!

குண்டாக இருந்தாலும் பரவா யில்லை!
குட்டையாய் இருந்தாலும் பரவா யில்லை!
செண்டாக அவளிருந்தால் பரவா யில்லை! - நான்
வண்டாகச் சுற்றிடுவேன் பரவா யில்லை!

அழகு குறைந்தாலும் பரவா யில்லை!
அணிகலன் குறைந்தாலும் பரவா யில்லை!
பழகும் அழகிருந்தால் பரவா யில்லை! - நான்
பயப்படாமல் கட்டிடுவேன் பரவா யில்லை!

தம்பியில்லை என்றாலும் பரவா யில்லை!
தந்தையில்லை என்றாலும் பரவா யில்லை!
நம்பிஎன்னை ஏற்றுக்கொண்டால் பரவா யில்லை! - நான்
நன்றாக வாழவைப்பேன் பரவா யில்லை!

**************************************************************************************

தட்டிக் கழிப்பதற்குக் கார ணங்கள்
தயாராக வைத்திருக்கும் ஆண்கள் கூட்டம்
கொட்டிக் கொடுத்துவிட்டால் மனது மாறும்
கொடுமையென்று மாறுமோ? குமரிப் பெண்ணே! 9840382003

31 வாழ்க்கை

முடிச்சுகள் நிறைந்த வாழ்க்கையடா!
முயற்சிகள் வேண்டும் வாழ்க்கையடா!
தடுப்புகள் தாண்டி வந்துவிட்டால்
தயாராய் இருக்குது கோட்டையடா!

ஆழங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையடா!
காலங்கள் வரும்வரை காத்திருந்தால்
கனிகள் உதிர்க்கும் தோட்டமடா!

கர்மங்கள் தொலையும் வாழ்க்கையடா!
கஷ்டங்கள் சூழும் வாழ்க்கையடா!
தர்மங்கள் எதுவெனத் தெரிந்துகொண்டால்
தாகம் தணிக்கும் தீர்த்தமடா!

வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
வலிகள் மிகுந்த வாழ்க்கையடா!
திருத்தங்கள் உள்ளே செய்துகொண்டால்
திருப்பங்கள் காட்டும் வாழ்க்கையடா!

குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
கொடுமைகள் மிகுந்த வாழ்க்கையடா!
இழப்புகள் மீறி எழுந்துநின்றால்
இமயமும் சாய்ந்து தோற்குமடா! 9840382003

32 வயதொரு தடையில்லை

வயதொரு தடையில்லை! - கல்வி
வாய்ப்பொரு தடையில்லை!
வறுமையும் தடையில்லை! - நீ
வாழ்க்கையில் உயர்தற்கே!

மனமது தெளிவானால் - நல்ல
மார்க்கமும் புலனாகும்!
செயலது சிறப்பானால் - நீ
ஜெயிப்பது நிஜமாகும்!

வறுமையில் பிறந்தாலும் - வாழ்
மனதினில் ராஜாவாய்!
வயதினில் முதிர்ந்தாலும் - வாழ்
மணமுள்ள ரோஜாவாய்!

எல்லாம் தெரிந்தாரும் - இங்கு
யாரும் கிடையாது!
ஒன்றும் அறியாரும் - இவ்
வுலகில் கிடையாது!

படித்தவர் எல்லாரும் - இங்குப்
பதவிகள் பெறவில்லை!
துடிப்புள்ள கல்லாரும் - இங்குத்
தோல்வியைப் பெறவில்லை!

உனக்குள்ள திறமையை - நீ
உணர்ந்ததில் முதன்மைசெய்!
உயர்வது அதனாலே -என
உள்ளத்தில் உறுதிவை!

திறமைகள் இருந்தாலும் - பலர்
உயர்வது கிடையாது!
குறை,அவர் குணம்;மேலும் - மனக்
கோழைக்கு உயர்வேது?

சிலருக்கு முன்கோபம்! - இன்னும்
சிலருக்குச் சந்தேகம்!
சிலருக்குச் சபைக்கூச்சம்! - இன்னும்
சிலருக்குத் தலைவீக்கம்!

குணங்களைச் சரிசெய்வாய்! - நீ
கொள்கையில் பிடிகொள்வாய்!
மனிதர்கள் துணைகொள்வாய்! - நீ
மாற்றத்தை எதிர்கொள்வாய்!

தகுதிகள் வரும்போது - நல்ல
தருணமும் வரும்தோழா!
தக்கவர் துணையோடு - அது
தைரியம் தரும்தோழா!

திட்டத்தைச் செயலாக்கு! - நீ
தெய்வத்தைத் துணையாக்கு!
கஷ்டத்தை வரவேற்று - நீ
கடமையில் பணியாற்று!

ஆரம்பத் தவறாலே - நீ
அதைரியப் படவேண்டாம்!
சீர்செய்த பின்னாலே - நீ
ஜெயிப்பதை விடவேண்டாம்!

புதுமைகள் உருவாக்கு! - நீ
போட்டியை எருவாக்கு!
புகழ்பொருள் வரவாக்கு! - இது
புண்ணியத் திருவாக்கு!

இருப்பது மிகக்கீழே! - நீ
நினைப்பாது மிகமேலே!
ஊக்கத்தின் விளைவாலே - நீ
உயர்ந்திடு மனம்போலே!

இலட்சியம் எதுவானால் - என்ன?
நிச்சயம் நிறைவேறும்
தத்துவம் இதுவாகும்! - இது
தரணிக்குப் பொதுவாகும்! 9840382003

33 கண்ணழகைப் பார்க்கப்பார்க்க


கண்ணழகைப் பார்க்கப்பார்க்கக் கவிதை ஊறுதே! - உன்
கனியிதழைப் பார்க்கப்பார்க்க ஆசை மீறுதே!
இடையழகைப் பார்க்கப்பார்க்க ஏக்க மாகுதே! - உன்
எழில்முழுதும் பார்த்துவிட்டால் தூக்கம் போகுதே!

கண்ணொடுகண் பார்த்துவிட்டால் மறக்க முடியலே! - அக்
காட்சிநெஞ்சில் ஓடுவதை நிறுத்த முடியலே!
வார்த்தையொன்று பேசிவிட்டால் மகிழ்ச்சி தாங்கலே! - அதை
வாய்க்குள்ளே சொல்லிப்பார்க்கும் மனசு தூங்கலே!

உனைஎனக்கே சொந்தமாக்க உள்ளந் துடிக்குது! - வேறு
ஒருவருனைப் பார்த்துவிட்டால் கோபம் வெடிக்குது!
மனைவிளக்கே! குலவிளக்கே! மனது வையையடி! - என்
வாழ்க்கைக்கே நீதான் திருப்பு முனையடி!

மாற்றிமாற்றிச் சூடிக்கொள்ள மாலை இல்லையா? - வீட்டில்
மனதார வாழ்த்துகின்ற நெஞ்சம் இல்லையா?
போற்றியுன்னை வைத்துக்காக்க நானும் இல்லையா? - என்
பொற்கொடிஉன் சம்மதந்தான் வேணும் இல்லையா? 9840382003

34 ராசி ராசி நீ யோசி யோசி

ஆற்றல் இல்லாமல்
அதிக எதிர்பார்ப்பில்
மாற்றும் 'வாசல்திசை'
வளம்தருமா வாலிபனே?

எண்ணிச் செய்யாமல்
ஏமாந்து கோட்டைவிட்டு
'எண்களை' மாற்றிவிட்டால்
எல்லாம் நடந்திடுமா?

தொடர்ந்து போராடும்
துணிச்சல் இல்லாமல்
அடைந்த 'பேர்மாற்றம்'
ஆசைநிறை வேற்றுமா?

சாதிக்க வேண்டுமெனில்
தைரியந்தான் வேண்டுமடா!
'மோதிரக்கல்' மாற்றுகின்ற
முட்டாளே, ஒன்றுகேள்!

தாயத்து, மாந்தரீகத்
தகடுகள், அருள்வாக்கு
மாயத்தில் ஒன்றும்
மாங்காய் பழுக்காது!

வெளிமாற்றம் எதனாலும்
வெற்றிவந்து சேராது!
எளிதாகும் எல்லாமே
உள்ளே உனைமாற்று! 9840382003

35 ஓட்டுப் போடாமல் இருக்காதே

ஓட்டுப் போடாமல் இருக்காதே! - நீ
உனது உரிமையை மறுக்காதே!
நாட்டை ஆள்வோரை நியமிக்கும்
நல்ல வாய்ப்பைநீ கெடுக்காதே!

தேர்தல் என்றால் அலட்சியமா? - எனக்குத்
தேவையில் லைஎன்ற தலைக்கனமா? - நீ
வாழ்தல் மட்டும் அவசியமா? - இந்த
வரிசையில் நிற்பது கேவலமா?

நாட்டின் குடிமகன் நீயில்லையா? - இங்கு
நடப்பதில் உனக்குப் பங்கில்லையா?
கேட்டைத் தடுக்க மனமில்லையா? - இங்குக்
கேட்பா ரற்றோர்க்குக் கதியில்லையா?

பாமரர் இங்கே பெரும்பான்மை! - அதைப்
பலிகடா வாக்கும் கொடுங்கோன்மை! - நீ
ஊமையாய் இருந்தால் எதற்காண்மை? - இதை
ஒழிக்க எழுந்தால் வரும்மேன்மை!

தீமையை விரட்டட்டும் உன்ஓட்டு! - புதுத்
திருப்பத்தைக் காட்டட்டும் உன்ஓட்டு!
கூர்மிக்க ஆயுதம் உன்ஓட்டு! - அதைக்
கூர்கெட்ட மனிதர்க்கு நீகாட்டு!

பணத்தால் ஜெயித்திடத் துடிக்கின்றார்! - ஆள்
பலத்தால் ஜெயித்திடத் துடிக்கின்றார்!
உனக்கா முறிக்கத் தெரியாது? - நீ
உடனே புறப்படு முடிவோடு! 9840382003

36 உனக்கு மட்டும் காதலா

படிக்கும் போதே காதலா?
பழகும் போதே ஆவலா?
அடக்க உணர்வே இல்லையா?
அன்னை பயமே வல்லையா?

மீசை முளைக்கும் வயதிலே
மெள்ள முளைக்கும் காதலில்
ஆசை அதிகம் இருக்குமா?
அறிவு அதிகம் இருக்குமா?

பருவம் தந்த கிளர்ச்சியைப்
பழுத்த காதல் என்பதா?
உருவம் தந்த கவர்ச்சியை
உயர்ந்த காதல் என்பதா?

இந்த வயதில் வருவது
இளமை ஈர்ப்புத் தானடா!
உண்மைக் காதல் வருவது
உலகம் புரியும் போதடா!

படிப்பில் கவனம் சிதறினால்
எடுக்கும் மதிப்பெண் குறையுமே!
எடுக்கும் மதிப்பெண் குறைவதால்
கிடைக்கும் வேலை தவறுமே!

கிடைக்கும் வேலை தவறினால்
நடத்தும் வாழ்க்கை நரகமே!
நடத்தும் நரக வாழ்க்கையால்
நடைப்பி ணந்தான் முடிவிலே!

காதல் வெற்றி பெற்றபின்
வாழ்க்கை தோல்வி யாவதா?
காதல் மட்டும் வாழ்க்கையா?
வாழ்க்கைக் காகக் காதலா?

பெற்றோர் ஆசி கிடைக்குமா?
பெரியோர் வாழ்த்துக் கிடைக்குமா?
உற்றார் நெஞ்சம் களிக்குமா?
உங்கள் மகிழ்ச்சி நிலைக்குமா?

ஆயி ரம்பேர் படிக்கையில்
உனக்கு மட்டும் காதலா?
போய்உன் வேலை பாரடா!
போட்டி போட்டுப் படியடா! 9840382003

37 மகனோ மகளோ

மகனோ மகளோ வரப்போறான்!
மடியில் தவழ்ந்து விழப்போறான்!
அகமும் புறமும் நிறைந்தவளே!
அன்னை யானாய் ஆருயிரே!

பூத்துக் குலுங்கும் மரமானாய்!
புன்னகை வழங்கும் முகமானாய்!
காத்துக் கிடந்த எங்களுக்குக்
கண்முன் கடவுள் நீயானாய்!

காலால் உதைப்பது தெரிகிறதா?
கனமாய் நகர்வது இனிக்கிறதா?
மேலே துடிப்பது ரசிக்கிறதா?
மேனி சிலிர்த்துச் சிவக்கிறதா?

கற்பனை யில்முகம் தெரிகிறதா?
கண்களில் ஜீவன் ஒளிர்கிறதா?
பற்களில் லாத புன்னகையில்
பாசம் பொங்கி வழிகிறதா?

ஆசைப் பட்டதைக் கேள்அம்மா!
அள்ளித் தருவேன் வாங்கம்மா!
பேசிச் சிரித்து மகிழம்மா!
பிள்ளைக்கும் சேர்த்தே உண்ணம்மா!

பாரம் தூக்கக் கூடாது!
படிகள் ஏறக் கூடாது!
தூரப் பயணம் ஆகாது!
துக்கம் அச்சம் கூடாது!

பாதி வேலை நான்செய்வேன்!
பக்கத் துணையாய் நானிருப்பேன்!
பாத பூஜை செய்கின்ற
பக்தன் போல அருகிருப்பேன்!

நிலவை மலரைப் பாரம்மா!
நிறைந்த மனதோ டிருஅம்மா!
உலவிக் காற்றில் மகிழம்மா!
உயர்ந்த நினைப்பே நினையம்மா!

வீரக் கதைகள் படியம்மா!
வேந்தனைப் பெற்றுக் கொடுஅம்மா!
ஞானக் கதைகள் படியம்மா!
நல்லவ னைப்பெற்றுக் கொடுஅம்மா! 9840382003

38 விடிந்தால் பணக்காரன்


உழைக்கிற எண்ணமே குறைந்து போச்சே!
உட்கார்ந்து சாப்பிடவே நினைக்க லாச்சே!
உல்லாச மாயைகள் பெருகிப் போச்சே!
ஊரில் துட்டுத்தான் பெரிதாய்ப் போச்சே!

ஒருராத் திரியில் பணக்காரன் ஆகவே
ஒவ்வொரு பயலும் நினைக்கின்றான்!
உப்புப் பெறாத பயல்கள் கூட
ஊரில் ஸ்டைலாய்த் திரிகின்றான்!

வாய்ப்பேச் சாலே காரியம் செய்து
வாழ்க்கையை நடத்தப் பார்க்கின்றான்!
வந்தவ ரைக்கும் இலாபம் என்றே
மாட்டிய பேர்களை ஏய்க்கின்றான்!

எதிலெதில் மக்கள் ஏமாறுவார் என்ற
இலக்கணம் கற்றுத் தெளிகின்றான்!
அதிலதில் நுழைந்து வேலையைக் காட்டி
அள்ளிச் சுருட்டிச் செல்கின்றான்!

விளம்பரத் தாலே வித்தைகள் காட்டி
வேசியைப் போல மயக்குகின்றான்!
விட்டில் பூச்சியாய் விழுகின்ற மக்களை
விழுங்கி ஏப்பம் விடுகின்றான்!

அரசியல் வாதி அதிகா ரிகளை
அங்கையில் போட்டுக் கொள்கின்றான்!
வழக்கு வந்தால் சட்டத்தின் ஓட்டையில்
வழுக்கித் தப்பிச் செல்கின்றான்!

உழைப்பு தியாகம் நேர்மை என்றால்
ஓஓ என்று சிரிக்கின்றான்!
உருட்டு, புரட்டு,திருட்டு, மிரட்டே
ஊரில் ஜெயிக்கும் என்கின்றான்!

ஜாலியாய் இருப்பதே வாழ்க்கை என்று
தத்துவம் பேசிச் சிரிக்கின்றான்!
சாயுங் காலம் வந்துவிட் டாலவன்
தாசி மதுவெனத் திரிகின்றான்!

சிறுகச் சேர்த்துப் பெருக வாழும்
சிந்தனை எல்லாம் போயாச்சே!
பெருகச் சேர்த்துச் சிறுக வாழும்
சின்னப் புத்தி வந்தாச்சே! 9840382003

39 இன்றைய சினிமா

விரட்டி விரட்டி உதைப்பது சிரிப்பு!
விரலைச் சுழற்றி மடிப்பது நடிப்பு!
உருட்டிப் புரட்டி எடுப்பது காதல்!
ஓடி ஒளிய வைப்பது பாடல்!

உறுப்புத் தெறிக்க ஆட்டினால் நடனம்!
உள்நாத் தெரியக் காட்டினால் வசனம்!
அறுத்துத் தொங்க விடுவது சண்டை!
அதையும் கூட்டம் ரசிப்பது விந்தை!

உணர்ச்சி காட்டும் முகங்களும் இல்லை!
ஒழுக்க மான கதைகளும் இல்லை!
பணத்தைப் போட்டார் எடுப்பதும் இல்லை!
பார்க்கும் நமக்குத் திருப்தியும் இல்லை! 9840382003

இதுதான் தம்பி இன்றைய சினிமா!
இதைநீ நானும் பார்ப்பது தகுமா?
இனிமேல் படங்கள் முன்புபோல் வருமா?
எதற்கும் வைப்போம் நம்பிக்கை பலமா!

40 இரண்டு தெய்வங்கள்


வினாயகர்த் துதி:
**********************
கெட்டுத் திரிந்து கீழ்மையில் உழன்றேன்;
பட்டுத் தெளிந்து பாதங்கள் பணிந்தேன்;
விட்டு விடாதே விநாயகா, உன்னைக்
கட்டித் தொழுதேன்; கரைசேர்ப் பாயே!

காளித் துதி:
***************
கெட்டி ஆயுளும் கிண்ணென்ற உடலும்
தட்டிக் கேட்டிடும் தைரியக் குணமும்
மட்டில் ஞானமும் மதிப்பும் செல்வமும்
கொட்டும் தமிழும் கொடுப்பாய் காளியே! 9840382003

41 பயத்தை விட்டவர்க்கே வெற்றியடா

எந்தக் கஷ்டத்திலும் முன்னேறலாம்! - நீ
இந்த உலகையொரு கைபார்க்கலாம்!
சொந்த முயற்சிகளைக் கைவிடாதே! - எந்தச்
சோதனைக் கும்அஞ்சி ஓய்ந்திடாதே!

வாழ்க்கை ஆரம்பம் சரியில்லையா? - உனக்கு
வாய்த்த தாய்தந்தை சரியில்லையா?
வாய்ப்பும் வசதிகளும் கிடைக்கலையா? - உன்
வாழ்வில் ஒருபிடிப்பும் இருக்கலையா?

எதையும் நினைத்துமனம் உளையாதே! - நீ
எடுத்த உறுதிகளில் குலையாதே!
எதையும் மாற்றவொரு காலம்வரும்! - உன்
இதயம் புரிந்துதவ தெய்வம்வரும்!

உன்னைப் படைத்தபொழு தேஇறைவன் - நீ
உயரத் திறமைகளும் படைத்துவிட்டான்!
சின்ன விசயங்களில் புழுங்காதே! - உன்
திறமை தேய்ந்துபுத்தி மழுங்காதே!

எந்த மனிதருக்கும் வாழ்க்கையிலே - இங்கு
ஏதோ ஒருவகையில் கஷ்டமுண்டு!
உந்தன் வாழ்விலவை சற்றதிகம்! - மனம்
உடைந்து போயின்உயர் தல்கடினம்!

பந்தை நீர்க்கடியில் மூழ்க்கிவிட்டால் - அது
பாய்ந்து விழுந்தடித்து மேல்வருமே - நீ
அந்தத் துடிதுடிப்பை பெறவேண்டும்! - உன்
ஆற்றல் முழுதும்வெளி வரவேண்டும்!

பத்து முயற்சிசெய்து பிறருயர்ந்தால் - நீ
நூறு முயற்சிசெய்ய வரவேண்டும்!
மொத்த நம்பிக்கையும் பெறவேண்டும்! - புவி
முழுதுன் வேர்வைத்துளி விழவேண்டும்!

உயர்ந்தே ஆவதென நீநினைத்தால் - இங்கே
உன்னைத் தடுப்பதொன்றும் இல்லையடா!
பயந்தே தோற்பதுதான் உலகமடா! - அந்தப்
பயத்தை விட்டவர்க்கே வெற்றியடா! 9840382003

42 சிகரெட்

இன்னுமா புகைக்கின்றாய்? - நீ
இன்னுமா புகைக்கின்றாய்?

அன்று தாய்சொன்னாள் கேட்கவில்லை!
அடுத்து மனைசொன்னாள் கேட்கவில்லை!
இன்று மகன்வந்து சொல்லுகின்றான்! - நீ
என்ன செய்வாயோ தெரியவில்லை!

இரண்டு சிகரெட்டில் ஆரம்பித்தாய்! - இன்று
இருபத் தைந்திற்கு வந்துவிட்டாய்! - இது
ஒருபிள்ளை வளர்ப்புச் செலவாகும்! - நீ
ஊதிக் கெடுப்பது புகையாகும்!

அழகுக் கென்று ஆரம்பித்தாய்! - அது
அடிமை யாக்கும் தெரியவில்லை!
பழகும் நட்புக் காரம்பித்தாய்! - அது
பலிகடா வாக்கும் தெரியவில்லை!

வட்ட வட்டமாய்ப் புகைவளையம்
வானில் பறக்க ஊதுகின்றாய்!
திட்ட வட்டமாய்ச் சொல்கின்றேன்! - அது
சிரத்திற்குச் சுருக்கு வளையமடா!

சிகரெட் ஊதிய வாயோடு
திரும்பி மனைவியின் வாயோடு
மகிழ்ந்து முத்தம் தருகின்றாய்! - இது
வன்கொடு மையன்றி வேறென்ன?

மலத்தில் நெளியும் புழுக்களுக்கு
மலத்தின் நாற்றம் தெரிவதில்லை!
இழுத்துப் புகைக்கும் உங்களுக்கு - அதன்
ஈன நாற்றம் புரிவதில்லை!

பிஞ்சுக் குழந்தைக்குச் சேராது! - புகை
பெரியவர் களுக்கும் ஆகாது! - இதைக்
கெஞ்சிக் கதறிச் சொன்னாலும் - உங்கள்
காதுக்கு மட்டும் ஏறாது!

முக்கி முனகி நோயாலே
மூச்சுத் திணறிச் சாகின்றாய்! - உன்
பக்கம் நின்ற பாவத்திற்கோ
பாதிநோய் எனக்கும் தருகின்றாய்?

நரம்பைக் கொஞ்சம் தூண்டிவிடும்! - அது
நாசத்தை உள்ளே ஊன்றிவிடும்!
இரும்பு போன்ற தேகத்தையும் -அது
இற்றுப் போகச் செய்துவிடும்!

சிந்தையி லேஒரு சுறுசுறுப்பு - உன்
செய்கையி லேஒரு விறுவிறுப்பு
வந்து விட்டது போலிருக்கும்! - ஆனால்
மந்தமே இறுதியில் மீந்திருக்கும்!

புகைத்தால் கிடைக்கும் இலாபங்கள்
பொய்யென் றுணர மாட்டாயா?
நகைத்தால் அந்த நேரத்தில்
நன்மை கோடி கேட்பாயா?

ஈரல் வெந்து போகுமடா!
இரைப்பை நொந்து சோருமடா!
மார டைப்பும் நேருமடா!
வாயில் புற்றும் தோன்றுமடா!

இன்றே நிறுத்தி விட்டாலும் - உன்
இரத்தத்தில் சேர்ந்த இரசாயனங்கள்
நின்றே இருக்குமாம் பத்தாண்டு! - இது
நினைத்துப் பார்க்கவே கொடுமையன்றோ?

சிறிய சிறிய சிகரெட்டால்
பெரிய பெரிய நோய்வாங்கி
நிறைய நிறையச் செலவிட்டும்
நிம்மதி காண முடியாது!

நிம்மதி யாய்நீ போய்விடுவாய்!
நிர்க்கதி யாவதுன் வீடல்லவா?
சம்மதித் தின்றே விட்டுவிடு! - நீ
சாதிக்க வேண்டும் முட்டிஎழு! 9840382003

43 இதுதான் இந்திய தேசமடா


இதுதான் இந்திய தேசமடா! - நீ
எண்ணி வெட்கப்பட வேண்டுமடா!

ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டடா! - அதில்
ஐந்நூறு கோடி ஆள்வோர்க்கடா!
போய்விடும் மீதியும் சூழ்வோர்க்கடா! - இந்தப்
பொய்ஜன நாயகம் யார்யார்க்கடா?

படையெடுத் தந்நியன் கொள்ளையிட்டான்! - இன்று
குடிகெடுத் திந்தியன் கொள்ளையிட்டான்!
பறிகொடுப் பதுதான் உன்விதியா? - தாய்ப்
பரதமே இதுதான் உன்கதியா?

திட்டத்திற் கில்லாப் பணமெல்லாம்
திருட்டமைச் சரிடம் இருக்குமடா!
பட்டத்து வாரிசு முறைபோல - அவர்
பதவிகள் பிள்ளைக்கும் தொடருமடா!

ஜனத்தொகை நூறு கோடியடா! - அதில்
தகுந்தவர் ஆறே கோடியடா!
கணக்கிற்கே மற்ற மீதியடா! - இது
கரைவது எந்தத் தேதியடா?

எழுபது பேர்க்கு விவசாயம்!
இருந்தும் இல்லை ஒருலாபம்!
அழுவதைப் பார்த்தால் பரிதாபம்!
யார்தான் இட்டார் பிடிசாபம்?

வருந்தி உழைப்பவன் விவசாயி! - வெறும்
வாய்ச்சவ டாளன் வியாபாரி!
வருந்தி உழைத்தவன் களைத்துவிட்டான்!
வாய்ச்சவ டாளன் கொழுத்துவிட்டான்!

கைத்தொழில் புரியும் ஏழைகளைக்
கனரக இயந்திரம் நசுக்குமடா!
மெய்த்திறன் கொண்ட மேதைகளை
மேல்நாட் டிற்கே விரட்டுமடா!

எல்லையில் சண்டை வந்துவிட்டால்
எங்கிருந் தோவரும் ஒற்றுமைதான்!
தொல்லைகள் நீங்கி அமைதிவந்தால்
தொலைந்து போகும் சத்தியந்தான்!

தராத நாடெல்லாம் கடன்வாங்கும்! - அதைத்
தகாத் மனிதர்க்குக் கடன்ஈயும்! - பின்
வராத கடனெனக் கணக்கெழுதும்!
வரிகளை மக்களின் தலைசுமக்கும்!

ஓட்டுப் போடாது மேல்மட்டம்! - அதை
ஒழுங்காய்ப் போடாது கீழ்மட்டம்!
ஆட்சியப் பிடிக்கும் தம்பட்டம்! - அது
ஆக்கும் நாட்டைத் தரைமட்டம்!

பாதி விலைக்குத் தங்கநகை - பணம்
பத்து நாளில் இரட்டிப்பு - எனச்
சேதி சொன்னால் அதுபோதும்!
தேசமே வாசலில் திறந்துவிடும்!

தடைசெய்யப் பட்ட மருந்தெல்லாம்
தாராள மாக நடைபோடும்!
குறைகூறப் பட்ட பொருளெல்லாம்
குவியலாய் நல்ல விலைபோகும்!

பெருகுது அந்நியன் முதலீடு! -அதில்
பிழைக்குது இந்தியத் திருநாடு!
கருகுது நம்தொழில் அடியோடு! - இதைக்
கண்டும் காணாது தாய்நாடு!

வரிகட் டாத நடிகர்கள்!
வாடகை தராத அமைச்சர்கள்!
கடன்கட் டாத தொழிலதிபர்!
கைநீட் டுகின்ற வாக்காளர்!

ஒருநாள் மழைக்குக் கெடும்சாலை!
ஓசிக் காசைப் படும்ஏழை!
நெரிசலில் திணறும் முச்சந்தி!
எரிந்து விழுகின்ற சிப்பந்தி!

போலிகள் சுதந்திர நடைபோடும்!
வேலிகள் தினம்தினம் பயிர்மேயும்!
காலிகள் அரசினில் விளையாடும்!
கூலிகள் மக்களின் தலையேறும்!

....................... 9840382003

44 இவள் ஒருத்திதான் பெண்ணா


இவள்ஒ ருத்திதான் பெண்ணா? - மீதி
இருப்பவள் எல்லாம் மண்ணா?
கவலையை விடுவாய் மனமே! - பொய்க்
காதலெல் லாம்சில தினமே!

வளர்க்கும் விதத்திலே தவறு! - சிலர்
வாலிபத் தில்குட்டிச் சுவரு!
கொளுத்தும் வெயிலிலும் கனவு! - பல
குமரிப் பெண்களின் நினைவு!

பெரியவர் கண்டிப்பில் வளர்ந்தாய்! - நீ
பெண்வாடை இன்றியே திரிந்தாய்!
உரிய பருவத்தில் வியந்தாய்! - உன்னை
ஒருபெண் பார்த்தாலே பயந்தாய்!

கிடைத்தது ஒருபெண்ணின் நெருக்கம்! - உன்னுள்
கிடிகிடு கிடுவென நடுக்கம்!
படைத்தவன் முகத்தினில் சிரிப்பு! - உடன்
பற்றி எரிந்தது நெருப்பு!

பார்த்ததைக் காதலாய் நினைத்தாய்! - அவள்
பழக்கத்தில் ஜீவனைக் கொடுத்தாய்!
வார்த்தையை வேதமாய் மதித்தாய்! - உன்
மனதுக்குள் மனைவியாய்த் துதித்தாய்!

வாழ்வே அவளென நினைத்தாய்! - நீ
வரிசையாய்க் கவிதைகள் தொடுத்தாய்!
ஊழ்வே றானதும் அதிர்நதாய்! - உடன்
உயிரற்ற உடல்போல் சரிந்தாய்!

பார்த்ததும் சிரித்ததும் சும்மா! - அவள்
பழகிய பழக்கமும் சும்மா!
ஈர்த்ததும் இழைந்ததும் சும்மா! - நான்
இடிந்து போயினேன் அம்மா! 9840382003

45 தட்டிக் கேளடா

தட்டிக் கேளடா! - தம்பி,
தட்டிக் கேளடா! - நீ
தப்பை எங்கும் தைரியமாய்த்
தட்டிக் கேளடா!
கெட்டுப் போச்சுடா! - ரொம்பக்
கெட்டுப் போச்சுடா! - நாடு
கேள்வி கேட்க ஆளில்லாமல்
கெட்டுப் போச்சுடா!

தட்டிக்கேட்க ஆளில்லாமல் குட்டிச்சுவர் ஆச்சு! - அது
தவறுசெய்யும் மனிதருக்குத் தைரியமாய்ப் போச்சு!
வெட்டிப்பேச்சுப் பேசிப்பேசி வீரம்செத்துப் போச்சு! - இது
விளங்காத பயலுக்கெலாம் ராஜ்ஜியமாய்ப் போச்சு!

அன்றாடப் பொதுவாழ்வில் காண்போம்பல் கொடுமை! - அதை
அப்படியே விட்டுவிட்டால் ஆவோம்நாம் அடிமை!
முளையிலேயே அதைக்கிள்ளி எறிவதுநம் கடமை! - பின்
முற்றவிட்டு அலறுவது மடமையிலும் மடமை!

கொடுமைகள் அனுபவிக்கும் யார்மனமும் குமுறும்! - உள்
கொதித்தாலும் அதைஎதிர்க்கத் தைரியந்தான் குறையும்!
நீதட்டிக் கேட்டுவிட்டால் ஆதரவு குவியும்! - பின்
நியாயத்தின் கையோங்கி அநியாயம் மறையும்!

தனிமனித ஒழுக்கங்கள் குறைந்ததன் விளைவு! - இன்று
சமூகத்தில் அரசியலில் மோசடிகள் மலிவு!
வாய்ப்பிருந்தால் எல்லாரும் தவறுசெய்ய விழைவார்! - இதில்
வாய்கொண்டு யார்யாரைக் கேள்விகேட்க விடுவார்?

நீமட்டும் யோக்கியமா என்றுதானே கேட்பார்?
நியாயந்தா னேஅதுவும்?யாரிதனை மறுப்பார்?
பணத்தையே அளவுகோலாய் வைத்திருக்கும் வரைக்கும்
பண்பாடு ஒழுக்கமெல்லாம் காற்றினிலே பறக்கும்!

............................................ 9840382003

46 இளந் தலைமுறையே இளந் தலைமுறையே

இளந்தலை முறையே! இளந்தலை முறையே!
என்னதான் உமக்குள் இருக்குது குறையே?

எழுந்ததும் படுக்கை சுருட்டவும் மாட்டீர் !
சுழலும்காற் றாடி நிறுத்தவும் மாட்டீர்!
அருகினில் நிற்கும் அன்னையும் பாரீர்!
கணினிமுன் ஓடி அதில்முகம் விழிப்பீர்!
அழைத்திடின் திரும்பி 'ஆங்'கவும் மாட்டீர்! .....

பசக்கெனப் பிதுக்கிப் பற்களைத் தேய்ப்பீர்!
ஆடியில் தெறித்துப் பரவிடும் எச்சில்
துடைக்கவும் மாட்டீர்! துப்புவ தற்குக்
குனியவும் மாட்டீர்! குளிப்பறை தன்னில்
துவாரங்கள் அடைக்கும் துண்டுத்தாள் நீக்கீர்!
துவட்டிய துண்டை வெய்யிலில் போடீர்!
தலைக்கெண்ணெய் வையீர்! விபூதியும் பூசீர்! ....

இட்டிலி தோசை எதனைவைத் தாலும்
இளப்பமாயப் பார்ப்பீர்! இருவிரல் தொட்டு
இரண்டுவாய் வைப்பீர்! எழுந்துசென் றிடுவீர்!
அவனிவன் என்பீர்! அவளிவள் என்பீர்!
அவரிவர் என்று யாரையும் பேசீர்!
அமர்வதில் கூட அடக்கத்தை காட்டீர்!
வெடுக்கெனப் பேசிப் படக்கெனச் செய்வீர்!
எடுத்தஇ டத்தில் எதனையும் வையீர்!
தேடியும் கத்தி ஓடியும் களைப்பீர்! .....

கேக்குகள் சாக்லேட் விருப்பமாய் உண்பீர்!
பிரித்திட்ட தாளைக் குப்பையில் போடீர்!
சுண்டலைத் தந்தால் கிண்டலைச் செய்வீர்!
புரிந்திடா மொழியில் படங்களைப் பார்ப்பீர்!
பொழுதிற்கும் காதில் சொருகுவீர் ஒன்றை!
இல்லையேல் கையில் நோண்டுவீர் ஒன்றை!
வேலையொன் றுரைத்தால் வெறுப்புடன் செய்வீர்!
மீண்டுமொன் றுரைத்தால் எரிச்சல டைவீர்! ......

செய்தித்தாள் படித்தால் சேர்த்ததை வையீர்!
போட்டவி ளக்கை அணைக்கவும் மாட்டீர்!
மூடிய குழாயும் சொட்டிட வைப்பீர்!
அரைகுறை வேலை; அரைகுறைப் பாடம்;
அரைகுறை உணவு; அரைகுறைப் பேச்சு;
அரைகுறை உறவு; அரைகுறை வாழ்க்கை! .......

இளந்தலை முறையே! இளந்தலை முறையே!
என்னதான் உனக்குள் இருக்குது குறையே? .... 9840382003

47 ஓர் அரசு ஊழியனும் அப்பாவியும்

வேண்டா வெறுப்பாய் வேலையைப் பார்ப்பான்!
இருக்கையில் என்றும் இருக்கவும் மாட்டான்!
சிறுநீர் கழிக்கச் சிலமுறை செல்வான்!
சிகரெட் புகைக்கப் பலமுறை செல்வான்!
அரட்டை அடிக்க அடிக்கடிச் செல்வான்!
தேநீர் குடிக்கத் திரும்பவும் செல்வான்!
குமுதம் விகடன் குங்குமம் படிப்பான்!

கண்முன் நிற்பதைக் காணவே மாட்டான்!
பலமுறை அழைத்தும் பார்க்கவே மாட்டான்!
நேரம் போக நேரம் போக
ஏதோ நினைவில் இருந்தவன் போல,
'என்ன சொன்னீர்?' என்றார் கேட்பான்!
புன்னகை என்பது மருந்திற்கும் இல்லை!

எதைக்கேட் டாலும் எரிந்து விழுவான்!
எனக்குத் தெரியா தென்றே உரைப்பான்!
கெஞ்சிக் கேட்டால் 'பொறுங்கள்' என்பான்!
பொறுத்துக் கேட்டால், 'இன்னும் பொறுங்கள்!'
பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தால்,
'பூட்டப் போகிறேன், போ! போ!' என்று
காவலால் வந்து கடுப்புடன் சொல்வான்!

மறுநாள் வந்து வரிசையில் நின்றால்,
'ஐயா அரைநாள் விடுப்'பென் பார்கள்.
அன்றைக்கு முழுதும் காத்துக் கிடந்தால்,
'பக்கத் தூர்க்கு மாற்ற'லென் பார்கள்!

'யாரிடம் கேட்க இனிமேல்?' என்றால்,
அவரிடம் போவென்பார்; அவரிடம் சென்றால்'
இவரிடம் போவென்பார் ; இவரிடம் சென்றால்,
சுவரிடம் பார்த்துச் சும்மா இருப்பார்!

காது ரிப்பேர் ஆன அவரோ,
'சாஅ ..ர்' என்றால் , 'யாஅ ..ர்' என்பார்;
'நாஅ ..ன்' என்றால் 'ஏஎ..ன்' என்பார்!

விவரம் சொன்னால் விழித்துப் பார்ப்பார்!
'உங்கள் கோப்பெதும் என்னிடம் இல்லை!
அதனால் என்னால் ஆவதொன் றில்லை!
முன்னால் இருந்த அவரையே பாரும்!'
என்று
சுவர்ப்பக்கம் மீண்டும் திரும்பிக் கொள்வார்!

என்ன செய்வதென் றேங்கி நிற்கையில்,
'புரியா ஆளாய் இருக்கின் றீரே!
கவரினைக் கொடுத்துக் காரியம் முடிப்பீர்!
கவனிப்பீர் எனையும்!' என்பான் ஒருவன்.

கருமத்தை அன்றே காதில் ஓதினால்
அழுதிருப் பேனே! அலையமாட் டேனே!
என்று கொடுத்துத் தொலைத்தே மீண்டேன்!

புறணிகள் பேசுவார்! போட்டுக் கொடுப்பார்!
தலைக்கனம் மிகுவார்! சந்தர்ப்ப வாதி!
பொறுப்பை என்றும் தட்டிக் கழிப்பார்!
பழியை என்றும் பிறர்மேல் போடுவார்!
பொறாமைக் காரர்! புழுங்க வைப்பார்!
கடைசியில் வருவார்! முதலில் ஓடுவார்!
முதல்நாள் வேலையை மூன்றாம்நாள் செய்வார்!
மூன்றாம்நாள் வேலையை முப்பதில் செய்வார்!
நல்ல வேலையைச் செய்வதே இல்லை! 9840382003

48 காதலிக்காதே

காத லிக்காதே! - நீ
காத லிக்கதே! - பின்
காதல் தோல்வி என்று புத்தி
பேத லிக்காதே!

சொந்தக் காலில் நிற்கு முன்பே காதலிக்காதே! - வெறும்
சுகத்திற் காகப் பொழுது போக்காய்க் காதலிக்காதே!
வந்த காதல் சரியா தப்பா காதலிக்காதே! - உன்
வாழ்க்கை யோடு விளையா டாதே! காதலிக்காதே!

சிரித்துப் பேசு கின்றாள் என்று காதலிக்காதே! - அவள்
சிவப்புத் தோலில் மயங்கி நீயும் காதலிக்காதே!
பொருத்த மின்றி அர்த்த மின்றி காதலிக்காதே! - உன்
புத்தி யைநீ அடகு வைத்துக் காதலிக்காதே!

அன்னை தந்தை எதிர்ப்பார் என்றால் காதலிக்காதே! -உனக்கு
அக்காள் தங்கைப் பொறுப்பி ருந்தால் காதலிக்காதே!
உன்னை மட்டும் பெரிதாய் எண்ணிக் காதலிக்காதே! - என்றும்
உன்னை முட்டாள் ஆக்கும் பெண்ணைக் காதலிக்காதே!

வாலி பத்தின் ஜாலிக் காகக் காதலிக்காதே! - நீ
வந்து சேரும் பணத்தை எண்ணிக் காதலிக்காதே!
தாலி கட்டும் எண்ண மின்றேல் காதலிக்காதே! - நீ
தங்கை என்று சொல்லிக் கொண்டே காதலிக்காதே!

எதையும் தாங்கும் இதயம் இன்றேல் காதலிக்காதே! - நீ
உதையும் வாங்கும் உடலம் இன்றேல் காதலிக்காதே!
கதைகள் வேறு நிஜங்கள் வேறு காதலிக்காதே! - நான்
கண்டிப் பாகச் சொல்லி விட்டேன் காதலிக்காதே! 9840382003

49 ஒரு செய்திக் கவிதை


கணவனின் வேலை அடிக்கடி வெளியூர்!
கள்ளப் புருசனைத் தேடினால் மனைவி!
கண்ணுக் கழகாய்க் கட்டிளங் காளை
சிக்கினான் ஒருவன் பணிசெயும் இடத்தில்!

வீட்டில்
மாமனார் இல்லை; மாமியார் மட்டுமே!
மாமி யார்க்கும் மாலைக் கண்நோய்!
வசதியாய்ப் போயிற்று வாலிபத் தினவிற்கு!
வீட்டிற்கே அழைத்து விருந்து கொடுத்தாள்!

கண்தான் குருடு; கருத்துமா குருடு?
கண்டு பிடித்துக் கத்தினால் கிழவி!

'புருஷன் வந்தால் போட்டுடைத் திடுவாள்!
போகும் மானம்! போகும் உயிரும்!
வருவதற் குள்ளே முந்திக் கொள்வோம்!
இன்றே முடிப்போம் இவளின் கதையை!
நடுச்சா மத்தில் நடுங்காது வருக!'
- கள்ளப் புருஷன் காதில் ஓதினாள்!

இப்புறம் இவளும் அப்புறம் அவனும்
குப்புறத் தூங்கிய கிழவியின் தலையில்
தலையணை வைத்துத் தரையொடு தரையாய்ச்
சேர்த்து அமுக்கினர்; சேர்ந்தால் கிழவி!

50 முடிந்ததைக் கிளறாதே

உன்னை மறந்துவிட்டேன் தங்கமே தங்கம்! - மனதில்
உனக்கினிமேல் இடமில்லை தங்கமே தங்கம்!
ஒருகாலம் காதலித்தோம் தங்கமே தங்கம்! - அது
உலகிற்குப் பிடிக்கவில்லை தங்கமே தங்கம்!

ஆண்டவனும் விரும்பவில்லை தங்கமே தங்கம்! - இனி
அதைநினைத்து என்னபயன் தங்கமே தங்கம்?
அந்தக் காலமா தங்கமே தங்கம்? - நாம்
அரளியைத் தின்பதற்கு தங்கமே தங்கம்?

ஓடிப் போகவா தங்கமே தங்கம்? - அது
ஒத்து வராதடி தங்கமே தங்கம்!
ஒரேஎ முடிவுதான் தங்கமே தங்கம்! - அது
ஒற்றுமையாய்ப் பிரிவதுதான் தங்கமே தங்கம்!

சொன்ன வார்த்தையெல்லாம் தங்கமே தங்கம் - நான்
சுத்தமாய் அழித்துவிட்டேன் தங்கமே தங்கம்!
சுற்றித் திரிந்ததெல்லாம் தங்கமே தங்கம் - நான்
சொப்பனமாய் மறந்துவிட்டேன் தங்கமே தங்கம்!

புகைப்படம் எடுத்ததெல்லாம் தங்கமே தங்கம் - நான்
பொசுக்கித் தள்ளிவிட்டேன் தங்கமே தங்கம்!
புன்னகை முகத்தையும் தங்கமே தங்கம் -நான்
போக்கித் துடைத்துவிட்டேன் தங்கமே தங்கம்!

வீட்டில் பார்ப்பவளைத் தங்கமே தங்கம் - நான்
விரைவில் மணமுடிப்பேன் தங்கமே தங்கம்!
விருப்பம் இருந்தால்வா தங்கமே தங்கம்! - எதையும்
வெளியில் காட்டாதே தங்கமே தங்கம்!

என்னை நினைத்துக்கொண்டு தங்கமே தங்கம் - நீ
உன்வாழ்வைக் கெடுக்காதே தங்கமே தங்கம்!
என்னைநம்பி வருபவட்குத் தங்கமே தங்கம் - நான்
என்றுமுண்மை யாயிருப்பேன் தங்கமே தங்கம்!

ஒருகதவு மூடிவிட்டால் தங்கமே தங்கம் - வாழ்வில்
ஒருகதவு திறந்துவிடும் தங்கமே தங்கம்!
மூடியதைப் பார்க்காதே தங்கமே தங்கம்! - அது
முடிந்துபோன கதையடி தங்கமே தங்கம்!

விபத்துப்போல் நடந்ததடி தங்கமே தங்கம்! - அதில்
இருவர்க்கும் காயமடி தங்கமே தங்கம்!
காயத்தை ஆற்றிடுவோம் தங்கமே தங்கம்! - இனிக்
கவனமாய் நாமிருப்போம் தங்கமே தங்கம்! 9840382003

51 இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்

ஏறுபோல் நடையைக் கொண்டாய்!
இளைஞர்கள் மனதை வென்றாய்!
வீறுகொள் எழுச்சி யாலே
வியத்தகு வெற்றி கண்டாய்!
மாறுகொள் சமயத் தாரும்
மகிழ்ந்திட, ராம ராஜ்யப்
பேறுகள் நாடு காணப்
பிரியனே ஆள வா!வா!

நீதியைத் தேடி, எங்கள்
நெஞ்செலாம் வாடி, ஆளும்
பாதகர் கூடி, நாட்டில்
பதுக்கிய கோடி கண்டு
தீதினைச் சாடி, நல்ல
திருப்பத்தை நாடி நின்ற
போதினில் எதிரே வந்தான்
புனிதனாம் மோடி! மோடி!

அமெரிக்கன் அலற, வெள்ளை
ஆங்கிலன் பதற, எங்கும்
திமிரியே திரியும் சீனன்
திகைப்பிலே உறையத், தெற்கே
குமரிக்கீழ் ராஜ பக்சே
குனிந்துமே பணியப், பாக்.கும்
குமுறியுள் தணியப் பூமி
கும்பிட வந்தான் மோடி!

விடையென வந்தான், நாடு
விடியலைக் காண்பதற்கே!
படையென வந்தான்,ஓடிப்
பகைவர்கள் ஒளிவ தற்கே!
தடையென வந்தான், ஊழல்
சக்திகள் பிழைப்ப தற்கே!
உடையென வந்தான், மானம்
உலகின்முன் காப்ப தற்கே!

ஏழ்மையில் பிறந்தாய்! தந்தைக்
கெடுபிடி வேலை செய்தாய்!
தாழ்மையைக் கண்டாய் இல்லை!
தனித்துவம் இழந்தாய் இல்லை!
கூர்மையாம் புத்தி பெற்றாய்!
கொள்கையில் பிடிப்புப் பெற்றாய்!
தீமையை எதிர்ப்பா தற்கே
திடங்கொண்ட நெஞ்சம் பெற்றாய்!

வாய்மையே வாழ்க்கை என்றாய்!
வளர்ச்சியே நோக்கம் என்றாய்!
நேர்மையே வெல்லும் என்றாய்!
நிர்வாகத் திறமை கொண்டாய்!
ஆமைபோல் ஆசா பாசம்
அனைத்தையும் சுருக்கிக் கொண்டாய்!
தூய்மையாம் ஆர்.எஸ். எஸ்.ஸில்
தொண்டொடு தியாகம் கற்றாய்!

வறண்டதாம் குஜராத் மண்ணின்
வடிவினை மாற்றி விட்டாய்!
திரண்டதாம் செல்வம் யாவும்
தெருவினில் காண வைத்தாய்!
அறுபது மாதம் கேட்டாய்;
அணுவணு வாக மாற்றம்
பெறுவது கண்ணில் காண்போம்!
பெருமையை உலகம் பேசும்!

தமிழக முதல்வர் உன்னைத்
தவறாக விமர்சித் தாலும்
உமிழ்ந்திட்ட வார்த்தை எண்ணி
உள்மனம் வைத்துக் கொண்டு
தமிழர்க்குக் கிடைக்கும் நன்மை
தடுக்கவே மாட்டாய் ஐயா!
உமிஎன அவரைக் கொள்வாய்!
உன்மனம் மக்க ளுக்கே!

வங்கத்தின் மம்தா உன்னை
வசைபாடித் தீர்த்திட் டாலும்
சிங்கத்தின் மகனே நீதான்
சீற்றமே கொள்ள மாட்டாய்!
வங்கத்து மக்க ளுக்கு
வகுத்திட்ட நலத்திட் டத்தின்
பங்கைநீ குறைக்க மாட்டாய்!
பாதகம் செய்ய மாட்டாய்!

நதிகளை இணைப்பாய்! மேலை
நாட்டினில் பதுக்கி வைத்த
நிதிகளைக் கொணர்வாய்! நீசர்
வெளியிலும் உள்ளும் செய்யும்
சதிகளை முறிய டித்துச்
சாதனை புரிவாய்! மக்கள்
விதிகளை மதிக்கச் செய்வாய்!
விலைகளைக் குறைப்பாய் ஐயா!

இந்துநீ என்ப தாலே
இருக்கின்ற முஸ்லீம் எல்லாம்
முந்திநீ செய்த தெண்ணி
முகம்சுளிக் கின்றார்! ஆமாம்!
வந்துநீ இதனை மாற்று!
மதமில்லை ஆன்மா விற்கே!
தந்துநீ பாது காத்துச்
சகோதரம் தழைக்கச் செய்வாய்! 9840382003

52 ஆணாகப் பிறந்திட வேண்டுமடா


அடுத்த பிறவியிலே - நான்
ஆணாகப் பிறந்திட வேண்டுமடா!
அப்படி பிறக்கையிலே - என்
அருமைப் புருசனும் பெண்பிள்ளையாய்
அவதாரம் எடுத்தே - எனக்கே
ஆசைப்பெண் டாட்டியாய் அமைந்துவிட்டால்,
ஆகா! என்னநடக்கும்? - அதை
அப்படியே சொல்லுகின்றேன், கேட்டுமகிழ்வீர்!

ஹாயாக ஹால்நடுவே - நான்
கால்மேலே கால்போட்டுக் கட்டளையிட்டு
வாயார வைதுமகிழ்வேன்! - அவள்
மாறாக ஏதேனும் முணுமுணுத்தால்
பேயாக மாறிடுவேன்! - தலை
பிடித்துச் சுவரிலே மோதவிடுவேன்!
நாயாகக் குளித்திடுவேன்! - பின்
ராத்திரிக்குக் கால்மாட்டில் விழுந்தழுவேன்!

விடிந்ததும் எழுந்திடுவேன்! - ஓடி
வேகமாய் வெறும்வயிற்றில் குடித்திடுவேன்!
முடிந்ததும் பறந்திடுவேன்! - அடி
மூதேவி சோற்றைப்போடு என்ருகத்துவேன்!

சோற்றிலே கல்கிடந்தால் - அவளைத்
தூக்கிப்போட்டு அப்படியே மிதிமிதிப்பேன்!
வீட்டிலே தூசிருந்தால் - அந்த
விளக்குமாற் றாலேயே சாத்திடுவேன்!

மறுநாள் சினிமாவில் - அவளை
மாறிமாறி முத்தமிட்டுக் கூட்டிவந்து
உருவே தெரியால் - இரவில்
ஓரிடம் விடாமல் சூடுவைப்பேன்!

நகைநட்டைத் திருடிடுவேன்! - வீட்டில்
நகராப் பொருளெல்லாம் அடகுவைப்பேன்!
பகைநெஞ்சும் பதைபதைக்க - அவள்
பலமாதக் கருவை அழித்திடுவேன்!

பத்துப் பவுன்நகையும் - பணம்
ஆபத்தா யிரமும் கொண்டுவந்தால்
வைத்துக் காப்பாற்றுவேன்! -இல்லை
வராதேஎன் றப்பனிடம் விரட்டிடுவேன்!

கண்டபடி ஊர்மேய்வேன்! - பின்
கையில் காசின்றித் தவித்துவிட்டால்
தெண்டனிட் டழுதிடுவேன்! - வீடு
திரும்பிவா திருந்திவிட் டேன்என்பேன்!
கொண்டு வரும்பணத்தில் - நான்
கொஞ்சநாள் குதூகலம் காட்டிமீண்டும்
வண்டுபோல் துளைத்திடுவேன்! - பின்
மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திடுவேன்!

இந்த விதமாக - நான்
எல்லாரும் மெச்சிட வாழ்ந்திருப்பேன்!
கந்த பெருமானே ! - எனக்குக்
கண்டிப்பாய் இந்த வரம்கொடுப்பாய்! 9840382003

53 பொண்டாட்டியப் போற்றுங்கடா நகைச்சுவை

பொண்டாட்டியைப் போற்றுங்கடா! - அவா
புத்திகெட்ட பொம்பளையா
கத்திக்கிட்டே இருந்தாலும்
பொண்டாட்டியப் போற்றுங்கடா!

உப்பள்ளித் தட்டினாலும்
உறைபள்ளிக் கொட்டினாலும்
அப்பளத்தை நொறுக்கிக்கிட்டே
அம்மாவ நினச்சிக்கொங்கடா!

மயிர்கல்லு கிடந்தாலும்
மன்னிச்சி விடுங்கடா!
தயிர்விட்டுக் கலந்தடிச்சித்
தண்ணியைக் குடிங்கடா!

கடபுடான்னு இரைஞ்சாலும்
கார்ச்சத்தம் கேட்டாலும்
கடவுளை வேண்டிக்கிட்டே
கண்ணைமூடிப் படுங்கடா!

தாறுமாறாப் பொருள்கிடக்கும்!
தரையெல்லாம் பிசுபிசுக்கும்!
ஏறுமாறாய்ப் பேசாதீங்கடா!
எடுத்தெல்லாம் தொடச்சிவைங்கடா!

விளக்குமாற்றைக் கையில் பிடிங்கடா!
விசுக்கென்று கூடி முடிங்கடா!
அழுக்கெல்லாம் துடைச்சி எடுங்கடா!
அதில்முகத்தைப் பாத்துச் சிரிங்கடா!

சின்னத்திரை மூழ்கியிருப்பா!
தீப்பிடிச்சிச் சட்டிகருகும்!
முன்னால ஓடிப்போயடா
முனகாம இறக்கிவைங்கடா!

எத்தனை இருந்தாலும்
இல்லத் தரசியவளே!
சத்தமும் போடவேண்டாம்!
சண்டையும் போடவேண்டாம்!

குறைசொல்லிச் சண்டையிட்டால்
கோபத்தை மனதில்வைத்து
மறைவாகப் பிள்ளைகளை
வதைத்துக் கொடுமைசெய்வாள்!

சந்ததிதான் பாழாகும்!
சந்தோசம் தூளாகும்!
வந்தவளைப் போற்றுங்கடா! - அவள்
மனதில் தேனை ஊற்றுங்கடா! 9840382003

54 எதைத் தின்ன


அமெரிக்காவை முந்திவிட்டோம் இதய நோயிலே!
ஐரோப்பாவை முந்திவிட்டோம் இனிப்பு நோயிலே!
ஆப்ரிக்காவை முந்துகிறோம் ஏப்பு நோயிலே! - நாம்
ஆறாவது வல்லரசா கொஞ்ச நாளிலே?

இருவயது மகன்மரணம் இரத்தப் புற்றிலா?
ஏழ்வயது மகள்விழியில் சோடா பாட்டிலா?
ஒருவயதில் இதயத்திலே ஓட்டை விழுகுது! - நாம்
உள்ளத்திலே கட்டிவைத்த கோட்டை சரியுது!

உண்ணுகின்ற உணவைவைத்தே நோய்கள் பெருகுது! - அது
உங்களது வாரிசுக்கும் அடுத்துப் பரவுது!
எம்.ஏ., பி.ஏ., படிப்பதெல்லாம் பிறகு படிக்கலாம்! - நீங்கள்
எதைத்தின்று வாழ்வதென்று முதலில் முடிக்கலாம்!

செயற்கையுரம் போட்டவயல் செழித்து வளருது! - அதைத்
தின்னத்தின்ன நோயெதிர்ப்புத் திறனும் குறையுது!
பயிர்க்கடித்த பூச்சிமருந் தன்னை மார்பிலே
பாலாகிப் பிள்ளைகளின் வாழ்வைக் கெடுக்குது! ...

...................................................................... 9840382003

55 இப்படி நாம் காதலிப்போம்


(கொடுத்த தலைப்பிற்கேற்ப 24 வரிகளுக்குள் எழுதியது)

படிக்கும் வயதில் காதலிப்பார்!
பணியில் லாமல் காதலிப்பார்!
தடுக்கி விழுந்த இடமெல்லாம்
தடியர் இன்று காதலிப்பார்!

படிப்பில் உயர்ந்த நிலையடைந்து
பதவிப் படிகள் பலகடந்து
முடிவில் வீட்டில் பார்ப்பவளை
முடிச்சுப் போட்டுக் காதலிப்போம்!

நம்மை நம்பி வந்தவளை
நன்மை தீமை எதுவரினும்
வெம்மை இன்றிக் காப்பாற்றி
விழிமேல் வைத்துப் போற்றிடுவோம்!

அளவாய்ப் பிள்ளை பெற்றுவைப்போம்!
ஆனந்த வாழ்வைக் கற்றுவைப்போம்!
பிளவே மனதில் தோன்றாமல்
பெருமை சேர வாழ்ந்திருப்போம்!

சாதிக் கின்ற இளமையிலே
சலனப் பட்டுக் காதலித்துப்
பாதிக் கிணறு தாண்டுவதோ?
பாதிப் போடு வாழுவதோ?

புனிதக் காதல் போர்வையிலே
பொய்மை மனிதர் புகுந்துசெயும்
மனிதம் கொன்ற காதலெல்லாம்
மறைக! வாழ்க மெய்க்காதல்! 9840382003

56 சாதி ஒழி மதம் அழி சாதி


(கொடுத்த தலைப்பிற்கேற்ப 24 வரிகளுக்குள்)

ஒற்றுமையை வளர்ப்பதற்கே சாதிகளை வைத்தார்!
ஒழுக்கத்தை வளர்ப்பதற்கே மதங்களையும் வைத்தார்!
கற்றவர்கள் யாருமிதை மறுத்திடவும் மாட்டார்!
கருத்தினிலே மாறுபட்ட தலைப்பெதற்குத் தந்தீர்?

சோற்றினிலே கல்கிடந்தால் கல்லைநீக்கி விட்டுச்
சுவைப்போமா? சோற்றையே தூக்கிஎறி வோமா?
வீட்டினிலோர் எலிபுகுந்தால் எலியையடிப் போமா?
வீட்டையே கொளுத்திவிட்டு வீரம்பேசு வோமா?

சாதிமதம் மனிதருக்குத் தனித்தஅடை யாளம்!
தவிர்த்துவிட்டால் மனிதகுலம் தனிமரமாய்ப் போகும்!
காதலினால் சாதிமதம் தவிடுபொடி யாகும்
காலம்வரும் எனநினைத்தால் அதுமடமை யாகும்!

ஐந்துமுறை தொழுபவர்கள் மதத்தைவிடு வாரோ?
அடியவரும் இராமஜெய ஜெபத்தைவிடு வாரோ?
நொந்துபோன மனங்களுக்கு ஆறுதலாம் மதங்கள்!
நூறுகோடி இருந்தாலும் இணைந்துவிடும் இனங்கள்!

வாழ்கவென்று நீங்கள்சொல்லி வாழ்ந்ததென்ன சொல்வீர்!
வீழ்கவென்று நீங்கள்சொல்லி வீழ்ந்ததென்ன சொல்வீர்?
வாழ்கதமிழ் என்றுரைத்தீர் வந்ததடா பங்கம்!
வீழ்கசாதி என்றுரைத்தீர் பெருகுதடா சங்கம்!

பூமியில்நாம் அனைவருமே ஆண்டவனின் பிள்ளை!
பூசலின்றி வாழ்ந்திடுவோம் புத்தியுமா இல்லை?
சேமமுற சாதிமத பேதங்களைக் கொல்வோம்!
செகத்தினிலே சகிப்புணர்வால் சாதித்து வெல்வோம்! 9840382003

57 நாளைய தமிழும் தமிழரும்

(கொடுத்த தலைப்பிற்கேற்ப 24 வரிகளுக்குள்)

தன்மீது நம்பிக்கை வைக்கின்ற தமிழா!
தமிழ்மீது நம்பிக்கை நீவைத்தால் தவறா?
தன்னைத்தான் பெருமையாய் நினைக்கின்ற தமிழா!
தாய்நாட்டின் பெருமைக்கு உழைத்தால்நீ தவறா?

பிள்ளைக்குத் தமிழில்பேர் வைத்தால்தான் என்ன?
பிறசொற்கள் உன்பேச்சில் தவிர்த்தால்தான் என்ன?
எள்ளாமல் தமிழில்தான் படிப்பித்தால் என்ன?
எல்லாம்உன் தமிழில்நீ படைத்தால்தான் என்ன?

மறைகின்ற மொழிஎன்ற பெயரைநீ மாற்று!
மகன்போலத் தமிழ்த்தாய்க்குப் புதுரத்தம் பாய்ச்சு!
குறைவற்ற விஞ்ஞானப் புதுச்சொற்கள் ஆக்கு!
குழந்தையும் புழக்கத்தில் அதையேற்க ஊக்கு!

படிப்பாளி உழவுக்குள் இறங்கத்தான் வேண்டும்!
படைப்பாளி ஆட்சிக்குள் நுழையத்தான் வேண்டும்!
துடிப்பாளி சமூகத்தைப் புதுப்பிக்க வேண்டும்!
கேடுப்பாளி யாரேனும் கிழிக்கத்தான் வேண்டும்!

ஆராய்ச்சி மனப்பான்மை வளர்ப்பாய்நீ தமிழா!
அயல்நாட்டு மோகத்தை விடுப்பாய்நீ தமிழா!
பாரில்உன் அடையாளம் தொலைக்காதே தமிழா!
பழமையின் சாரத்தை இழக்காதே தமிழா!

பலத்தையும் திறத்தையும் அறியாமல் தமிழா!
பலவீனப் பட்டுத்தன் தேவைக்குத் தமிழா!
உலகத்தின் பின்என்றும் ஓடாதே தமிழா!
உலகந்தான் உன்பின்னால் வரவேண்டும் தமிழா! 9840382003

58 நண்பன் நாகராஜன் மகன் திருமண வாழ்த்து

அச்சுப்பொறி ராஜன்மகன் அழகுத்திரு மாறன்!
அறிவாற்றலில் விளையாட்டினில் அசத்தும்படு சூரன்!
பச்சைத்திரு மயிலோனடி பணியும்பெரு வீரன்!
பட்டங்களும் பதக்கங்களும் பரிசும்பெருந் தீரன்!

இச்சைப்படி மணந்தான்அவள் ஏற்றம்தரும் வாணி!
இருவீட்டிற்கும் புகழ்சேர்த்திடும் இன்பத்தமிழ் ராணி!
மெச்சும்படி நடப்பாள்அவள் நன்மக்களைப் பேணி!
மென்மேல்சுகம் மென்மேல்வளம் சுரக்கும்மலர்க் கேணி!

எந்நாட்டினில் எவ்வூரினில் எங்கேயிருந் தாலும்
தென்னாட்டவர் பண்பாட்டினில் சிறந்தேயவர் வாழி!
முன்னோர்வழி மூத்தோர்வழி முறையேஅவர் வாழி!
பின்வாரிசு தம்பேர்சொலப் பெரிதேஅவர் வாழி! 9840382003

59 மனிதா மனிதா மனிதா

மனிதா! மனிதா! மனிதா! - உன்
வாழ்க்கைப் பயணம் இனிதா?

கல்லும்முள்ளும் குத்திக் கிழிக்கிறதே!
கடும்வெயில் மண்டை பிளக்கிறதே!
புல்லும்கூடத் தடுக்கி விடுகிறதே!
பூவும்கூடப் போட்டு அமுக்கிடுதே!

ஏக்கத்தோடு ஏக்கத்தோடு வாழுகின்றாய்!
ஏமாந்து ஏமாந்து சாகின்றாய்!
ஊக்கத்தோடு ஊக்கத்தோடு உழைக்கின்றாய்!
உற்சாகம் குறைந்தே காணுகின்றாய்!

நோக்கத்தோடு நோக்கத்தோடு வாழ்ந்தாலும்
நொந்துபோக நொந்துபோக வைக்கிறதே!
ஆக்கம்வர ஆக்கம்வர உழைத்தாலும்
அழவைத்து அழவைத்துப் பார்க்கிறதே!

நினைத்ததன் படியே நடக்கிறதா?
நேசிப்ப துடனே கிடைக்கிறதா?
கணக்கெல்லாம் குளறு படியாகுதே!
காரியம் குட்டிச் சுவராகுதே!

அதுவேண்டும் இதுவேண்டும் எனஓடி
அதுஇல்லை இதுஇல்லை எனவாடி
மதுவினில் விழுவது எதைத்தேடி?
மறுபடி போனது வருமோடி?

வாழ்க்கையென்ன வாழ்க்கையென்ன பந்தயமா?
மனிதனும் மனம்இல்லா எந்திரமா?
சேர்ப்பதென்ன சேர்ப்பதென்ன தந்திரமா?
செல்வமே தாரக மந்திரமா?

பார்வையில் தெளிவு வரவேண்டுமே!
பாதையில் தேர்வு முறைவேண்டுமே!
பயணத்தில் உறுதி நடைவேண்டுமே!
பாதத்தைப் பதித்து விடவேண்டுமே! 9840382003